தீபாவளி பண்டிகை நாளில் பொதுமக்கள் அதிகாலையிலேயே எழுந்து தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து சாமி கும்பிட்டனர். தொடர்ந்து இனிப்பு பலகாரங்கள் மற்றும் விசேஷ உணவுகளை தயாரித்து உண்டு, பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். பின்னர் மாலை நேரத்தில் குடும்பத்துடன் சுற்றுலாத்தலங்களுக்கு சென்று விளையாடி மகிழ்ந்தனர். சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பம் குடும்பமாக வந்தனர்.
அவர்கள் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், மீன்காட்சி சாலை, முக்கடல் சங்கமிக்கும் திருவேணி சங்கம சங்கிலித்துறை கடற்கரை பகுதி, சுனாமி நினைவு பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, வட்டக்கோட்டை பீச் ஆகிய இடங்களில் சுற்றி மகிழ்ந்தனர். மேலும், திரிவேணி சங்கமம் மற்றும் கடற்கரை பகுதியில் அமர்ந்து மகிழ்ச்சியுடன் பொழுதை கழித்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகர்கோவிலுக்கு வந்த தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து தொடங்கப்படும் என்று அறிவித்து இருந்தார். ஆனால், இன்னமும் படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை.
இந்தநிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் படகுதளத்திற்கு சென்றனர். அங்கு படகு போக்குவரத்து நடைபெறாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர். சுற்றுலா பயணிகளின் வருகையையொட்டி கன்னியாகுமரியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரம் அரண்மனைக்கு உள்ளூரில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இங்கு கேரள பாரம்பரியமிக்க சின்னங்கள் அதிக அளவில் இருப்பதால் வெளிநாட்டில் இருந்தும் மக்கள் அதிக அளவில் வருவது வழக்கம். தீபாவளி பண்டிகையையொட்டி பத்மநாபபுரம் அரண்மணைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம் குடும்பமாக வந்தனர். அவர்கள் அருமனையை சுற்றி பார்த்து மகிழ்ச்சியுடன் திரும்பினர். இதனால் அரண்மனை வளாகத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
திருவட்டார் அருகே உள்ள மாத்தூர் தொட்டிப்பாலத்தில் தீபாவளி அன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் பாலத்தின் ஒரு முனையில் இருந்து மறுமுனை வரை நடந்து சென்று இயற்கை அழகை ரசித்தனர். அத்துடன் பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள பூங்காவில் விளையாடி, ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். இதுபோல் குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக சென்று மகிழ்ந்தனர்.