மார்த்தாண்டம் அருகே விபத்தில் சிக்கிய லாரி போக்குவரத்து பாதிப்பு
Views - 355 Likes - 0 Liked
-
மார்த்தாண்டம் அருகே கழுவன்திட்டை பகுதியில் லாரி மின்கம்பத்தில் மோதி விபத்திற்குள்ளானதால் அப்பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
மேல்புறம் பகுதி வழியாக குழித்துறை நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. கழுவன்திட்டை அருகே நரியன்விளை பகுதியில் வந்த போது லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியில் நின்ற மின்கம்பத்தில் மோதியது. இதைகண்டு அப்பகுதியில் நின்றவர்கள் அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர். அதிர்ஷ்டவசமாக லாரி டிரைவர் மற்றும் அவ்வழியாக நடந்து சென்றவர்களுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. டிரைவரை அப்பகுதியினர் மீட்டனர். லாரி மின்கம்பத்தில் மோதி நின்றதால் அவ்வழியாக வாகனங்கள் செல்வதற்கு இடையூறு ஏற்பட்டது. பைக், ஆட்டோ, கார் போன்ற வாகனங்கள் மட்டும் இயங்கின. அரசு போக்குவரத்து கழக பஸ்கள், டெம்போ, லாரி போன்ற வாகனங்கள் இயங்கவில்லை. அவசர தேவைக்காக அவ்வழியாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வாகனம் செல்ல வேண்டி இருந்தது. தீயணைப்பு படை வாகன டிரைவரின் தீவிர முயற்சியால் அந்த வாகனம் மட்டும் அப்பகுதி வழியாக நகர்ந்து சென்றது. விபத்து குறித்து பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்திற்கும், களியக்காவிளை போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பின் விபத்திற்குள்ளான லாரி அங்கிருந்து மீட்கப்பட்டது. சேதம் அடைந்த மின்கம்பம் மற்றும் மின்கம்பிகளை ஊழியர்கள் மாற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் தடைப்பட்டது.
News