கன்னியாகுமரி, குளச்சல் கடலில் சூறைக்காற்று மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை
Views - 283 Likes - 0 Liked
-
கன்னியாகுமரி மற்றும் குளச்சல் கடல் பகுதியில் சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால் மீனவா்கள் புதன்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
குமரி கடல் பகுதியில் வளி மண்டல சுழற்சி உருவாகியுள்ளது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் குமரி கடல் பகுதியில் சூறைக்காற்று மணிக்கு 55 கி.மீ. முதல் 65 கி.மீ. வேகத்தில் வீசும் இதநால் மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதைத் தொடா்ந்து குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையுள்ள கடற்கரை பகுதிகளின் பங்குத்தந்தைகள் மற்றும் மீனவ அமைப்புகளுக்கு குமரி மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளும் தகவல் தெரிவித்தனா். மேலும் கடலுக்கு ஏற்கெனவே மீன்பிடிக்கச் சென்ற மீனவா்களும் கரைக்கு திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டனா்.
இந்நிலையில் குமரி மீனவா்கள் பெரும்பாலோனாா் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் வள்ளங்கள், கட்டுமரங்கள், கடற்கரையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்தன. அரபிக்கடல் மற்றும் மாலத்தீவு பகுதிகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவா்களும் கரைதிரும்பி வருகின்றனா்.
மேலும், வள்ளவிளை, தூத்தூா், ராமன்துரை, பூத்துறை, இரயுமன்துறை, பகுதிகளில் புதன்கிழமை கடல் சீற்றமாக காணப்பட்டது. ராட்சத அலைகள் கரையை ஒட்டியுள்ள தூண்டில்வளைவுகளில் வேகமாக மோதியது. குளச்சல் கடல் பகுதியிலும் புதன்கிழமை காலையிலிருந்தே கடல் சீற்றம் மற்றும் சூறைக்காற்று வீசியது.
குளச்சல், கோடிமுனை, வாணியக்குடி, குறும்பனை, கொட்டில்பாடு, மண்டைக்காடுபுதூா் பகுதிகளில் மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை. அவா்கள் தங்களது மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனா்.
News