வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் குழித்துறை மறை மாவட்டம் சார்பில் தக்கலையில் நடந்தது
Views - 277 Likes - 0 Liked
-
பத்மநாபபுரம்,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை ரத்து செய்யக்கோரி வடமாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு தரப்பில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்தநிலையில் குழித்துறை மறை மாவட்டம் சார்பில் விவசாயிகளுக்கு ஆதரவாக வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தக்கலையில் உள்ள கல்குளம் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் ஜேசு ரெத்தினம் தலைமை தாங்கினார். மாத்திரவிளை வட்டார முதல்வர் மரிய வின்சென்ட் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். நாகர்கோவில் வக்கீல் சங்க தலைவர் மரிய ஸ்டீபன் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினார். காரங்காடு மறைமாவட்ட முதல்வர் ஜார்ஜ், முளகுமூடு மறைமாவட்ட முதல்வர் மரிய ராஜேந்திரன் ஆகியோர் பேசினர்.
ஆயர்-எம்.எல்.ஏ.க்கள்
ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ராேஜஷ்குமார், பிரின்ஸ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நூர்முகமது, லீமாரோஸ் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் ஜாண் கிறிஸ்டோபர், சாமுவேல்ராஜ், மீரான் மைதீன், ரமேஷ்குமார், மகேஷ் லாசர், பாஸ்டர் ஞானதாஸ் உள்பட போதகர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டு பேசினர்.
போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் பொன்னையா கண்டன உரையாற்றினார். தக்கலை மறை மாவட்டம் ஆயர் மார் ராஜேந்திரன் ஆசியுரையாற்றினார்.
கோஷம்
கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது, 3 வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும், வேளாண் திருத்த சட்டங்கள் குறித்து விவசாய மக்களின் கருத்துகளையும், கோரிக்கைகளையும் ஏற்று நாடாளுமன்றத்தில் விவாதிக்கவும், மத்திய அரசு விவசாயிகளை அழைத்து நிபந்தனையற்ற பேச்சு வார்த்தை நடத்த வேண்டும், அத்தியாவசிய பொருட்கள் சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும், அரசு குறைந்தபட்ச விலை நிர்ணயத்தை சட்ட வடிவமாக்கவும், தேசிய மின்சார திருத்த சட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
பலத்த பாதுகாப்பு
இந்த ஆர்ப்பாட்டம் காலை 10 மணி முதல் பகல் 12.45 மணி வரை நடந்தது. ஆர்ப்பாட்டம் காரணமாக திற்பரப்பு, அருமனை சாலையில் செல்லும் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.ஆர்ப்பாட்டத்தையொட்டி தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் ஜேசு ரெத்தினம் உள்பட 700 பேர் மீது தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.News