" “If opportunity doesn't knock, build a door.”"

வரலாறு காணாத உச்சத்தை எட்டும் பெட்ரோல், டீசல் விலை!

Views - 313     Likes - 0     Liked


  • சென்னை, 
     
    பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயரத் தொடங்கி இருக்கிறது. தொடர்ந்து விலை உயர்ந்து வருவதால் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட உள்ளது.
     
    பெட்ரோல், டீசல் விலையின் தாக்கம் அனைத்து விதமான பொருட்களிலும் இருக்கும். அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு பெரிய அளவில் பார்க்கப்படுகிறது. கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. அப்போது (2017 ஜூன் 16-ந்தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் 68 ரூபாய் 2 காசுக்கும், டீசல் 57 ரூபாய் 41 காசுக்கும் விற்பனை ஆனது.
    அதன் பின்னர், 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ந்தேதி முதல் தினசரி விலை நிர்ணயம் செய்யும் நடைமுறை அமல்படுத்தப்பட்டது. அது வந்த பிறகு தினமும் பெட்ரோல், டீசல் விலையில் ஏற்றம், இறக்கம் காணப்பட்டு வந்தது.
     
    அந்தவகையில் 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 13-ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.70-ஐ கடந்தது. அதன்பின்னரும் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருந்தது. 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் 23-ந்தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.75-ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டது.
     
    அவ்வப்போது பெட்ரோல் விலை சற்று குறைந்து, பெருமளவில் உயர்ந்து கொண்டே வந்ததை தான் பார்க்க முடிகிறது. அதன்படி, கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் ஒரு லிட்டர் பெட்ரோல் 80 ரூபாயை கடந்து விற்பனை ஆனது. தொடர்ச்சியாக விலை அதிகரித்து, 2018-ம் ஆண்டு செப்டம்பர் 16-ந்தேதி 85 ரூபாயையும் கடந்து, அக்டோபர் 4-ந்தேதி வரலாறு காணாத உச்சத்தை தொட்டு இருந்தது. அப்போது ஒரு லிட்டர் 87 ரூபாய் 33 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது.
     
    அதன்பின்னர், விலை அதிரடியாக சரியத் தொடங்கி ஏற்ற, இறக்கத்துடன் பெட்ரோல் விலை காணப்பட்டு வந்தது. 75 ரூபாய் முதல் 85 ரூபாய் வரையிலான இடைவெளியில் விற்பனை ஆனது. இந்த நிலையில் கடந்த ஆண்டு (2020) டிசம்பர் மாதம் 7-ந்தேதிக்கு பிறகு விலை மாற்றம் இல்லாமல் (86 ரூபாய் 51 காசு) காணப்பட்டு வந்த பெட்ரோல் விலை, நேற்று முன்தினம் முதல் மீண்டும் விலை உயரத் தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் லிட்டருக்கு 24 காசுகள் உயர்ந்து, ஒரு லிட்டர் பெட்ரோல் 86 ரூபாய் 75 காசுக்கு விற்பனை ஆனது. அதேபோல், நேற்றும் லிட்டருக்கு 21 காசு அதிகரித்து, ஒரு லிட்டர் 86 ரூபாய் 96 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது.
     
    பெட்ரோல் விலையை போலவே டீசல் விலையும் உயர்ந்து கொண்டேதான் இருக்கிறது. கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந்தேதி 80 ரூபாய் 4 காசுக்கு விற்பனை ஆனது. இது வரலாறு காணாத உச்சமாக இருந்தது. நேற்றும் டீசல் விலை லிட்டருக்கு 26 காசு உயர்ந்து 79 ரூபாய் 72 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், பெட்ரோல் விலை இன்றும் மாற்றம் செய்யப்படவில்லை. டீசல் விலையிலும் மாற்றம் செய்யப்படாமல் ஒரே விலையில் நீடிக்கிறது. கடந்த சில தினங்களாக ஏறுமுகத்தில் இருந்த பெட்ரோல், டீசல் விலை இன்று மட்டும் உயரவில்லை. இதனால்  பெட்ரோல், டீசல் விலை  வரலாறு காணாத உச்சத்தை மீண்டும் தொடும் எனத்தெரிகிறது. 
    News