பிரிஸ்பேன் டெஸ்ட்: இந்தியாவுக்கு 328 ரன்கள் வெற்றி இலக்கு - கடைசி நாளில் முடிவு கிடைக்குமா?
Views - 284 Likes - 0 Liked
-
பிரிஸ்பேன்,இந்தியா- ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 369 ரன்களும், இந்தியா 336 ரன்களும் எடுத்தது. 33 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 3-வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்திருந்தது. டேவிட் வார்னர் (20 ரன்), மார்கஸ் ஹாரிஸ் (1 ரன்) களத்தில் இருந்தனர்.இந்த நிலையில் 4-வது நாளான நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் துரிதமான ரன் சேகரிப்பில் கவனம் செலுத்தினர். நடராஜனின் ஓவரில் ஹாரிஸ் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி ஓடவிட்டார். 11.2 ஓவர்களில் அந்த அணி 50 ரன்களை தொட்டது. அதன் பிறகு இந்திய பவுலர்கள் தங்களது பிடியை இறுக்கியதும் ரன்வேகம் சற்று குறைந்தது.தொடக்க விக்கெட்டுக்கு 89 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் பிரித்தார். அவரது பந்து வீச்சில் ஹாரிஸ் (38 ரன்)விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டிடம் பிடிபட்டார். அடுத்த ஓவரில் வாஷிங்டன் சுந்தரின் சுழலில் டேவிட் வார்னர் (48 ரன், 75 பந்து, 6 பவுண்டரி) எல்.பி.டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ்.-ன் படி அப்பீல் செய்தும் பலன் இல்லை.இதைத் தொடர்ந்து 3-வது விக்கெட்டுக்கு இணைந்த மார்னஸ் லபுஸ்சேனும், ஸ்டீவன் சுமித்தும் அதிரடி காட்டினர். லபுஸ்சேன் 25 ரன்களில் (22 பந்து, 5 பவுண்டரி) வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜின் பந்து வீச்சில் ஸ்லிப்பில் நின்ற ரோகித் சர்மாவிடம் சிக்கினார். அதன் பிறகு அந்த அணிக்கு குறிப்பிட்ட இடைவெளியில் விக்கெட் சரிந்த வண்ணம் இருந்தது. சுமித் 42 ரன்னில் இருந்த போது எல்லைக்கோடு பக்கம் கொடுத்த நல்ல கேட்ச் வாய்ப்பை முகமது சிராஜ் வீணடித்தார். பந்து அவரது கையில் பட்டு தெறித்து பவுண்டரிக்கு ஓடியது. பீல்டிங்கில் செய்த தவறுக்கு தனது பந்துவீச்சின் மூலம் முகமது சிராஜ் பரிகாரம் தேடிக்கொண்டார். அவர் வீசிய கொஞ்சம் எழும்பி வந்த பந்து சுமித்தின் (55 ரன், 74 பந்து, 7 பவுண்டரி) கையுறையில் முத்தமிட்டபடி ‘கல்லி’ திசையில் நின்ற ரஹானேவிடம் கேட்ச்சாக தஞ்சமடைந்தது. மிடில் வரிசையில் கேமரூன் கிரீன் (37 ரன்), கேப்டன் டிம் பெய்ன் (27 ரன்) ஆகியோரும் கணிசமான பங்களிப்பை அளித்தனர்.ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுக்கு 243 ரன்கள் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது. மழை ஓய்ந்ததும் தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சில் 75.5 ஓவர்களில் 294 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது சிராஜ் 5 விக்கெட்டுகளும், ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.இதன் மூலம் இந்தியாவுக்கு 328 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 1.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 4 ரன் எடுத்திருந்த போது மீண்டும் மழை கொட்டியது. அத்துடன் 4-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. மழையால் நேற்றைய தினம் 22 ஓவர்கள் இழப்பு ஏற்பட்டது.இந்தியாவின் வெற்றிக்கு இன்னும் 324 ரன்கள் தேவைப்படுகிறது. ஆஸ்திரேலிய மைதானத்தில் 300 ரன்களுக்கு மேலான இலக்கை இறுதிநாளில் எட்டுவது சுலபமல்ல. அது மட்டுமின்றி ஆடுகளத்தில் ஆங்காங்கே வெடிப்புகள் தென்படுகின்றன. இதனால் பந்து அதிகமாக எகிறும். ரன் எடுப்பது சிரமம். எனவே இன்றைய கடைசி நாளில் இந்திய வீரர்கள் ‘டிரா’ செய்யும் நோக்குடன் ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இன்றும் அங்கு மழை பெய்வதற்கு 80 சதவீதம் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பிற்பகலிலும், மாலை நேரத்திலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. போட்டிக்கு வருணபகவான் வழிவிடுவாரா? முடிவு எப்படி இருக்கும்? என்ற பரபரப்பான சூழல், கடைசி நாள் ஆட்டத்தின் மீதான ஆர்வத்தை தூண்டியுள்ளது.இந்த டெஸ்ட் டிராவில் முடிந்தால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலை ஆகிவிடும். கடந்த முறை பார்டர்-கவாஸ்கர் கோப்பையை இந்தியா கைப்பற்றியிருப்பதால் டிராவில் முடிந்தால் கோப்பையை தக்க வைத்துக்கொள்ளும் என்பது நினைவு கூரத்தக்கது.இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் கடைசிநாள் ஆட்டத்தில் முதலாவதாக களமிறங்கிய ரோகித் சர்மா, சுப்மன் கில் ஜோடியில், ரோகித்சர்மா 7 ரன்னில் கேட்ச் ஆகி அதிர்ச்சி அளித்தார். அடுத்ததாக சுப்மன் கில்லுடன், புஜாரா ஜோடி சேர்ந்து விளையாடி வருகிறார்.பிரிஸ்பேனில் அதிகபட்ச ‘சேசிங்’ எத்தனை?பிரிஸ்பேன் மைதானத்தில் எந்த அணியும் 300 ரன்களுக்கு மேலான இலக்கை வெற்றிகரமாக விரட்டிப்பிடித்ததில்லை. 1951-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி 236 ரன்கள் இலக்கை எட்டியதே இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்ச சேசிங் ஆகும்.‘டிராவில் முடிந்தால் ஆஸ்திரேலியாவுக்கு மோசமான முடிவாக இருக்கும்’- பாண்டிங்ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அளித்த பேட்டியில், ‘இந்த தொடர் சமனில் (1-1) முடிந்தால் இரண்டு ஆண்டுக்கு முன்பு தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்ததை விட இது ஆஸ்திரேலியாவுக்கு மோசமான முடிவாக இருக்கும் என்று கருதுகிறேன். ஏனெனில் காயம் உள்ளிட்ட பிரச்சினையால் சரியான வீரர்கள் இன்றி இந்திய அணி எந்த அளவுக்கு போராடுகிறது என்பதை பார்க்கிறோம். இந்த தொடரில் 20 வீரர்களை அவர்கள் பயன்படுத்தி விட்டனர். ஆனால் ஆஸ்திரேலிய அணியில் காயத்தில் இருந்து குணமடைந்த வார்னர் கடைசி இரு டெஸ்டில் ஆடியுள்ளார். கடந்த முறை விளையாடாத ஸ்டீவன் சுமித் தற்போது முழுமையாக பங்கேற்றுள்ளார். இப்படிப்பட்ட நிலைமையில் தொடரை கைப்பற்ற முடியாமல் போனால் இதை ஆஸ்திரேலியாவுக்கு மோசமான முடிவு என்றே வர்ணிப்பேன்’ என்றார்.5 விக்கெட் வீழ்த்திய முகமது சிராஜ் நெகிழ்ச்சிஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி அசத்தி வரும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் 26 வயதான முகமது சிராஜ் நேற்று 73 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார். பிரிஸ்பேன் மைதானத்தில் 2003-ம் ஆண்டு ஜாகீர்கானுக்கு பிறகு இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்திய முதல் இந்தியர் முகமது சிராஜ் தான். அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘சமீபத்தில் எனது தந்தை மறைந்தார். மிகவும் கடினமான இந்த சூழலை சமாளித்து என்னால் 5 விக்கெட் கைப்பற்ற முடிந்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தந்தை மறைவுக்கு பிறகு எனது அம்மாவிடம் போனில் பேசினேன். அவரது பேச்சு எனக்கு நம்பிக்கையை கொடுத்தது. மனதளவில் என்னை வலுப்படுத்தியது. அதன் பிறகு எனது தந்தையின் கனவை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தினேன். இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்தமைக்காக கடவுளுக்கு நன்றி. இது தான் எனது தந்தையின் ஆசையாகவும் இருந்தது. அவர் இன்று உயிருடன் இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார். ஆனாலும் அவரது ஆசி எனக்கு இருக்கிறது என்பது தெரியும். 5 விக்கெட் வீழ்த்திய பிறகு எனது உணர்வை விவரிக்க வார்த்தைகளே இல்லை’ என்று கூறி நெகிழ்ந்தார்.News