கொரோனா அச்சம் காரணமாக இந்தியா உள்பட 20 நாடுகளின் பயணிகளுக்கு தடை - சவுதி அரேபியா அறிவிப்பு
Views - 280 Likes - 0 Liked
-
ரியாத்,மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக சவுதி அரேபியா உள்ளது. அங்கு இதுவரை 3 லட்சத்து 68 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 6 ஆயிரத்து 383 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.இந்தநிலையில் சவுதி அரேபியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை பரவ வாய்ப்புள்ளதாகவும், எனவே தற்போது நடைமுறையில் உள்ள தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் அண்மையில் எச்சரிக்கை விடுத்தது.அதேபோல் சவுதி அரேபியா அரசும் வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொரோனா பாதிப்பு அதிகமுள்ள இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் சவுதி அரேபியா வருவதற்கு அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது.அதன்படி இந்தியா, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, லெபனான், துருக்கி, சுவீடன், பிரேசில், இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, அர்ஜென்டினா, இத்தாலி, அயர்லாந்து, போர்ச்சுகல், தென் ஆப்பிரிக்கா, , இந்தோனேசியா, பாகிஸ்தான் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து வருவோருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த தற்காலிகத் தடை உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 9 மணி முதல் அமலுக்கு வந்தது. இது தொடர்பான அறிவிப்பை சவுதி அரேபிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.தடை செய்யப்பட்ட இந்த நாடுகள் வழியாக தடை அமலாவதற்கு 14 நாட்களுக்கு முன் பயணம் செய்தோருக்கும் இந்தத் தடை உத்தரவு பொருந்தும் என்று சவூதி உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.அதே சமயம் இந்த பயணத் தடையில் அலுவல் ரீதியாக வரும் வெளிநாட்டு அதிகாரிகள், தூதர்கள், சவுதி குடிமக்கள், மருத்துவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘சவுதி அரேபிய மக்கள், மருத்துவர்கள், அரசு உயர் அதிகாரிகள், அவர்கள் குடும்பத்தினர் யாரேனும் தடை செய்யப்பட்ட 20 நாடுகளுக்கு கடந்த 14 நாட்களுக்கு முன் சென்று வந்திருந்தாலோ அல்லது அந்த நாட்டில் விமானத்தில் இறங்கி வேறு விமானம் மாறியிருந்தாலோ அரசின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க வேண்டும்’’ என அறிவுறுத்தப்பட்டுள்ளது.முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, சவுதி அரேபியா சர்வதேச விமான சேவைக்கு தடை விதித்து எல்லைகளை மூடியதும், பின்னர் கடந்த மாத தொடக்கத்தில் இந்த தடைகளை திரும்பப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.News