9,11 ம் வகுப்புகள் துவக்கம் கல்வி அதிகாரிகள் ஆய்வு
Views - 303 Likes - 0 Liked
-
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 487 பள்ளிகளிலும் 9 மற்றும் 11 ம் வகுப்புகள் துவங்கியதால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியோடு பள்ளிகளுக்கு வந்தனர்.
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு வந்து கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் தமிழக அரசு 9 மற்றும் 11 ம் வகுப்புகளும் பிப்ரவரி மாதம் 8 ம் தேதி முதல் திறக்கப்படும் என்று அறிவித்து இருந்தது.
9 மற்றும் 11 ம் வகுப்புகள் திறக்கப்பட்டன. கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் உட்பட 487 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் எல்லாம் 9 மற்றும் 11 ம் வகுப்புகள் துவங்கியதை முன்னிட்டு மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியோடு பள்ளிகளுக்கு வந்தனர்.
72 குழுக்கள் கண்காணிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் 9 மற்றும் 11 ம் வகுப்புகள் துவங்கப்பட்டு உள்ளதை தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் மேற்பார்வையில் நாகர்கோவில், தக்கலை, குழித்துறை, திருவட்டார் ஆகிய கல்வி மாவட்ட அலுவலர்கள் 4 பேர்கள், வட்டார வள மைய பயிற்றுனர்கள் 50 பேர்கள், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் 3 பேர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் 5 பேர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் 8 பேர்கள், அனைவருக்கும் கல்வி திட்ட உதவி திட்ட அலுவலர் ஒருவர், இடைநிலை கல்வி திட்ட உதவி ஒருங்கிணைப்பாளர் ஒருவர் என்று 72 குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளிகளையும் இந்த குழுவினர் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது பள்ளிகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா, மாணவ, மாணவிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்து தானா பள்ளிக்கு வந்துள்ளார்களா, பெற்றோர்களின் ஒப்புதல் கடிதம் பெறப்பட்டு உள்ளதா உட்பட அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் கடைபிடிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தனர்.
மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 மற்றும் 12 ம் வகுப்புகள் திறக்கப்பட்டதன் மூலம் 49 ஆயிரத்து 92 மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு வந்து கொண்டிருந்த நிலையில் 9 மற்றும் 11 ம் வகுப்புகள் திறக்கப்பட்டதன் மூலம் நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 15 ஆயிரத்து 841 மாணவ, மாணவிகளும், தக்கலை கல்வி மாவட்டத்தில் 13 ஆயிரத்து 996 மாணவ, மாணவிகளும், குழித்துறை கல்வி மாவட்டத்தில் 9 ஆயிரத்து 76 மாணவ, மாணவிகளும், திருவட்டார் கல்வி மாவட்டத்தில் 9 ஆயிரத்து 954 மாணவ, மாணவிகள் என்று மொத்தம் 48 ஆயிரத்து 867 மாணவ, மாணவிகள் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு வருகின்றனர். இதன்மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் 9,10,11,12 ஆகிய வகுப்புகள் திறக்கப்பட்டதை முன்னிட்டு 97 ஆயிரத்து 959 மாணவ, மாணவிகள் தினமும் பள்ளிகளுக்கு வந்து செல்லும் நிலை உருவாகி உள்ளது. இதனால் கல்வித்துறை மற்றும் சுகாதார துறையினர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
கல்லூரிகள் திறப்பு
தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே கல்லூரிகளில் இறுதி ஆண்டு வகுப்புகள் திறக்கப்பட்டு மாணவ, மாணவிகள் கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் முதலாம் ஆண்டு, 2 ம் ஆண்டு வகுப்புகளும் திறக்கப்பட்டதால் கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள் உற்சாகத்தோடு வந்தனர்.
News