" “If opportunity doesn't knock, build a door.”"

பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சம்: காஸ் சிலிண்டர் விலை 50 உயர்வு: ஒரே மாதத்தில் 2வது முறையாக அதிகரிப்பு: மக்கள் கடும் அவதி

Views - 276     Likes - 0     Liked


  • பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சம்: காஸ் சிலிண்டர் விலை 50 உயர்வு: ஒரே மாதத்தில் 2வது முறையாக அதிகரிப்பு: மக்கள் கடும் அவதி

    சேலம்: பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து உச்சம் பெற்று வரும் நிலையில், வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர் விலை நேற்று திடீரென 50 உயர்த்தப்பட்டுள்ளது. நடப்பு மாதம் 2வது முறையாக விலையேற்றப்பட்டுள்ளது. சென்னையில் 785, சேலத்தில் 803 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு மாற்றி வருகிறது. இதில், பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றுகின்றனர். காஸ் சிலிண்டர் விலை மாதத்திற்கு ஒரு முறை என மாற்றப்பட்டு வருகிறதுஆனால், சமீபகாலமாக மாதத்திற்கு 2 முறை சிலிண்டர் விலையை உயர்த்தி வருவது மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஸ் சிலிண்டரின் நடப்பு மாதத்திற்கான (பிப்ரவரி) புதிய விலை கடந்த 1ம் தேதி நிர்ணயிக்கப்பட்டது. அதில், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யவில்லை. மாறாக 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலையை 191 அதிகரித்தனர். வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயராமல் இருந்தநிலையில், திடீரென கடந்த 4ம் தேதி விலை அதிகரிக்கப்பட்டது. அதில், நாடு முழுவதும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக மானியமில்லா சிலிண்டர் விலையை 25 அதிகரித்தனர். இதனால், சென்னையில் 710க்கு விற்கப்பட்ட மானியமில்லா சிலிண்டர், 735 ஆகவும், சேலத்தில் 728ல் இருந்து 753 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. இதுவே டெல்லி, மும்பையில் 719, கொல்கத்தாவில் 745.50 ஆக உயர்ந்தது.

    இந்நிலையில் நடப்பு மாதம் 2வது முறையாக நேற்று (15ம் தேதி) வீட்டு உபயோக மானியமில்லா காஸ் சிலிண்டர் விலை திடீரென 50 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை நள்ளிரவு எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு வெளியிட்டது. இதனால், வீட்டு உபயோக மானியமில்லா சிலிண்டர் விலை சென்னையில் நேற்று காலை முதல் 50 உயர்ந்து 785 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் 753ல் இருந்து 803 ஆக உயர்ந்தது. இதுவே டெல்லி, மும்பையில் 769 ஆகவும், கொல்கத்தாவில் 795.50 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 19 கிலோ வர்த்தக காஸ் சிலிண்டர் விலையை நேற்று ₹9 குறைத்துள்ளனர். இம்மாதம் 1ம் தேதி 191 அதிகரிக்கப்பட்ட நிலையில், தற்போது 9 மட்டும் குறைத்திருக்கின்றனர். இதனால், அதன் விலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை.

    வீட்டு உபயோக சிலிண்டர் விலை நடப்பு மாதம் 4ம் தேதி 25ம், நேற்று 50ம் உயர்த்தப்பட்டதால், இம்மாத விலையேற்றம் என்பது 75 ஆக உயர்ந்துள்ளது. இது சாதாரண மக்களை கடுமையாக பாதிப்படைய செய்துள்ளது. ஏற்கனவே பெட்ரோல் விலை தினமும் 25 காசு முதல் 40 காசு வரையில் உயர்த்தப்படுவதால், அதன் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதுவரை இல்லாத நிலையில், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநிலங்களில் சில மாவட்டங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100ஐ எட்டிவிட்டது. தமிழகத்தில் 93ஐ எட்டியிருக்கிறது. டீசல் விலையும் வட மாநிலங்களில் 90ஐயும், தமிழகத்தில் 85ஐயும் கடந்துள்ளது.

    பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் புது உச்சத்தை தொட்டு வருகிறது. நேற்று சென்னையில் பெட்ரோல் விலை 91ஐ தாண்டி விட்டது. நேற்று இங்கு பெட்ரோல் 23 காசு அதிகரித்து 91.19க்கு விற்கப்பட்டது. டீசல் 28 காசு உயர்ந்து 84.44 ஆனது. இன்னும் சில நாட்களில் சென்னையில் பெட்ரோல் 100ஐ எட்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  அரியலூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய பகுதிகளில் 92ஐ தாண்டி விட்டது.பெட்ரோல், டீசலை தொடர்ந்து காஸ் சிலிண்டரின் விலையும் அதிகரிக்கப்பட்டிருப்பது மக்கள் தலையில் விழுந்த அடுத்த அடியாக பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

    இதுபோதாததற்கு தற்போது வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையையும் ஏற்றி விட்டனர். இதன்காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை பெருமளவு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சிலிண்டர் விலையேற்றம் பற்றி எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், ‘‘சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால், காஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. வரும் மாதங்களிலும் விலையேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது,’’ என்றனர்.

    'டிசம்பரில் 2 முறை அதிகரிப்பு'
    கடந்த டிசம்பர் மாதம் வீட்டு உபயோக மானியமில்லா காஸ் சிலிண்டர் விலை 2 முறை ஏற்றப்பட்டது. டிசம்பர் 1ம் தேதியும், 15ம் தேதியும் தலா 50 100 விலையேற்றம் செய்தனர். அதுபோலவே நடப்பு மாதம் 4ம் தேதி 25ம், நேற்று (15ம் தேதி) 50ம் என 75 அதிகரித்துள்ளனர்.

     
     
    News