மோட்டார் சைக்கிளில் சென்றபோது மினி டெம்போ மோதி 5 வயது சிறுவன் பலி
Views - 258 Likes - 0 Liked
-
நாகர்கோவிலை அடுத்த ஆசாரிபள்ளம் மேலசங்கரன் குழி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 37), கூலி தொழிலாளி.
இவரது மனைவி ஜெகஜோதி (33). இவர்களுக்கு ஹரிஷ் (5), அஷ்வந்த் (3) என்ற மகன்கள் இருந்தனர். நேற்று மாலை ஜெகஜோதி, தனது கணவரிடம் தாயார் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கூறினார். இதையடுத்து ஜெகதீசன், மனைவி, குழந்தைகளுடன் கணபதிபுரம் அழகன்விளை பகுதியில் உள்ள மாமியார் வீட்டிற்கு செல்ல தயாரானார்.
மோட்டார் சைக்கிளில் மனைவி, குழந்தைகளுடன் ஜெகதீஷ் சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளின் முன்னால் மூத்த மகன் ஹரீஷ்அமர்ந்திருந்தார். சூரப்பள்ளம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர் பாராதவிதமாக அந்த வழியாக வந்த மினி டெம்போ மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். ஹரீஷ், ஜெகதீசன் இருவரும் படுகாயம் அடைந்தனர். ஜெகஜோதிக்கு லேசான காயம் ஏற்பட்டது. அஷ்வந்த் காயமின்றி தப்பினார். ரத்த வெள்ளத்தில் கிடந்த ஹரீஷ், ஜெகதீசன் இருவரையும் சிகிச்சைக்காக அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஹரீஷை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஜெகதீசனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி தகவல் அறிந்ததும் ராஜாக்கமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு தப்பியோடிய மினி டெம்போ டிரைவரை தேடி வருகிறார்கள்.
மேலும் மினி டெம்போ டிரைவர் அருள்லிங்கம் மீது சப்-இன்ஸ்பெக்டர் தங்க நாடார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.பலியான ஹரீசின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் நடந்தது.
News