சென்னை : அசோக்நகர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் இன்று அவசர ஆலோசனை
Views - 285 Likes - 0 Liked
-
2011 சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 10 இடங்களில் போட்டியிட்டது. இந்தமுறையும் 10 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி விரும்புகிறது.தி.மு.க.வுடன் நடந்த தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையின்போது, இந்த தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரட்டை இலக்க எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்கவேண்டும் என்று திருமாவளவன் கேட்டுக்கொண்டார். ஆனால் தி.மு.க. கூட்டணியில் இந்த முறை அதிக கட்சிகள் உள்ளதால் அதிகபட்சம் 5 தொகுதிகள் தான் ஒதுக்கமுடியும் என்று தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்கள்.எனவே முதற்கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. ஆனால் அப்போது திருமாவளவன் நிருபர்களிடம் கூறும்போது, தி.மு.க.வுடன் விரைவாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக நடத்தி முடிப்போம். 2 நாட்களில் நல்ல தகவல் வரும் என்று கூறியிருந்தார்.அதன்படி, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினர் நேற்று மாலை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். இதனால் அண்ணா அறிவாலயத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி குழுவினர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் வரவில்லை.இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி வட்டாரத்தில் விசாரித்தபோது, தி.மு.க. கூட்டணியில் கடந்த 2011 சட்டமன்ற தேர்தலை போன்று 10 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் அவர்கள் அத்தனை தொகுதிகள் வழங்கமுடியாது என்று கூறிவிட்டனர். இதனால் நாங்கள் சற்று இறங்கி, தற்போது குறைந்தபட்சம் 8 தொகுதிகளாவது ஒதுக்குங்கள் என்று எங்கள் நிலைப்பாட்டை தெரிவித்திருக்கிறோம். அவர்களும் தலைமையிடம் பேசி முடிவு சொல்வதாக தெரிவித்திருக்கிறார்கள் என்று கூறினர்.விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் முயற்சியாக இருதரப்பிலும் தொலைபேசி வழியாகவும் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேவேளை தி.மு.க.-விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே இன்று பேச்சுவார்த்தை நடக்குமா? என்றும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.இந்நிலையில் திமுகவுடனான தொகுதிப் பங்கீடு இழுபறி தொடர்பாக இன்று காலை 10 மணிக்கு சென்னை அசோக்நகர் அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்த உள்ளனர். திமுகவுடன் இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில் இந்த ஆலோசனை முக்கியம்வாய்ந்ததாக கருதப்படுகிறது.News