அய்யா வைகுண்டசாமி அவதார தின ஊர்வலம்
Views - 310 Likes - 0 Liked
-
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமியின் 189-வது அவதார தின விழாவை முன்னிட்டு நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு அவதார தின ஊர்வலம் நேற்று நடைபெற்றது.அய்யா வைகுண்டசாமியின் ஜெயந்தி நாளான மாசி 20-ந் தேதியை அய்யா வழி பக்தர்கள் அய்யா வைகுண்டசாமியின் அவதார தின விழாவாக கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் அவதார தின விழாவை முன்னிட்டு நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்பு செல்லும் மாபெரும் அவதார தின விழா ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். இந்த வருட 189-வது அவதார தின விழா ஊர்வலம் நேற்று நடைபெற்றது.
காலை 6 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் இருந்து அவதார தின விழா ஊர்வலம் புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பாலபிரஜாபதி அடிகளார் தலைமை தாங்கினார். பையன் கிருஷ்ணராஜ், பையன் நேம்ரிஸ், பையன் கிருஷ்ண நாமமணி, பையன் செல்லவடிவு ஆகியோர் முன்னிலை வகித்தனர். அய்யாவின் புனித நூலான அகிலத்திரட்டை தாங்கிய அலங்கரிக்கப்பட்ட வாகனம் முன் செல்ல, தொடர்ந்து முத்து குடைகளும், மேள தாளங்களும் சென்றன. ஊர்வலத்தில் வந்த அய்யா வழி பக்தர்கள் காவி உடை அணிந்து தலைப்பாகை கட்டி அய்யா சிவ சிவா.. அரகரா.. அரகரா… என்று பக்தி கோஷமிட்டவாறு ஊர்வலத்தில் வந்தனர்.பின்னர் சுசீந்திரம், வழுக்கம்பாறை, ஈத்தங்காடு, வடக்கு தாமரைகுளம் வழியாக சாமிதோப்பு வந்து முத்திரிக்கிணற்றங்கரையை சுற்றிவந்து தலைமைப்பதியின் ரத வீதி மற்றும் தலைமைப்பதியை சுற்றி வந்து காலை 10 மணியளவில் ஊர்வலம் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின்படி, ஊர்வலத்திற்கு கன்னியாகுமரி துணை சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.News