குமரியில் ஒரே நாளில் ரூ.16 லட்சம் பறிமுதல்
Views - 292 Likes - 0 Liked
-
தேர்தல் முறைகேடுகளை தடுக்க நடத்தப்பட்ட வாகன சோதனையின் போது குமரியில் ஒரே நாளில் ரூ.16 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.குமரி மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளில் பொதுத்தேர்தலும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் இடைத்தேர்தலும் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நடைபெற இருக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பரிசுப் பொருட்கள், பணப்பட்டுவாடா, மதுபானங்கள் வழங்குவது போன்ற முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுக்க தொகுதிக்கு 3 பறக்கும் படை வீதம் 18 பறக்கும் படைகளும், தொகுதிக்கு 3 நிலையான கண்காணிப்புக்குழு வீதம் 18 கண்காணிப்புக்குழுக்களும் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவர்கள் நடத்திவரும் சோதனையில் ஆங்காங்கே ரூ.50 ஆயிரத்துக்கு அதிகமாக பணம் கொண்டு செல்பவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கல்குளம் வட்ட வழங்கல் அதிகாரி மரிய ஸ்டெல்லா தலைமையிலான நிலையான கண்காணிப்புக் குழுவினர் குளச்சல் தொகுதிக்கு உட்பட்ட ஆலஞ்சி சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது அந்த வழியாக கேரள பதிவு எண் கொண்ட ஒரு லாரி வந்தது. அந்த லாரியை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது லாரியில் இருந்த கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த நபரிடம் சரியான ஆவணம் எதுவும் இல்லாமல் ரூ.1½ லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அதிகாரிகள் அந்த பணத்தை கைப்பற்றினர்.இதேபோல் கல்குளம் சமூக பாதுகாப்புத் திட்ட தனி தாசில்தார் இக்னேஷியஸ் சேவியர் தலைமையிலான பறக்கும் படையினர் குளச்சலில் கருங்கல்ரோடு சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக கேரள மாநில பதிவெண்ணைக் கொண்ட மினி கண்டெய்னர் லாரி ஒன்றை வழிமறித்து சோதனை செய்தனர்.இதில் அந்த லாரியின் டிரைவரிடம் ஆவணம் எதுவும் இல்லாமல் ரூ.3 லட்சத்து 44 ஆயிரத்து 740 பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.நாகர்கோவில் சிறப்பு தாசில்தார் (நெடுஞ்சாலை நிலமெடுப்பு) பாண்டியம்மாள் தலைமையிலான பறக்கும் படையினர் நேற்று மதியம் வாகன சோதனை நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக செருப்பாலூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் காரில் வந்தார். அந்த காரை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.அப்போது அதில் எவ்வித ஆவணமும் இன்றி ரூ.51,500 பணம் வைத்திருந்தது தெரிய வந்தது. அதிகாரிகள் அந்த பணத்துக்கு உரிய ஆவணங்களைக் கேட்டபோது அடகு வைத்துள்ள நகைக்கு வட்டி கட்டுவதற்காக வங்கிக்கு அந்த பணத்தை கொண்டு செல்வதாகவும், அதற்கான ஆவணத்தையும் காண்பித்தார். அந்த பணம் எப்படி வந்தது? என்று அதிகாரிகள் கேட்டதற்கு ஆவணங்கள் எதையும் காட்டவில்லை. ஆனால் ரப்பர் விற்ற பணம் என்று கூறியதாக தெரிகிறது. அதற்கும் ரசீது இல்லாததால் அதிகாரிகள் அந்த பணத்தைக் கைப்பற்றி திருவட்டார் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.கருங்கல் அருகே பாலூர் சந்திப்பில் துணை தாசில்தார் அனில் குமார் தலைமையில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கேரள பதிவெண் கொண்ட காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரை ஓட்டி வந்தவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் கருங்கல் அருகே உதய மார்த்தாண்டம் குதரிப்பாறைவிளை பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பதும், போதிய ஆவணங்கள் இன்றி பணத்தை கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை தேர்தல் அதிகாரி சுனில்குமார் வசம் ஒப்படைத்தனர்.இதேபோல கிள்ளியூர் சிவன் கோவில் பகுதியில் பறக்கும் படை அதிகாரி அனில்குமார் தலைைமயிலான அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது கேரள பதிவெண் கொண்ட கார் வந்தது. காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர்.புதுக்கடை அருகே வெள்ளை அம்பலம் பகுதியில் நேற்று காலை தேர்தல் பறக்கும் படை அதிகாரி அனிதா குமாரி தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு லாரி வந்தது. லாரியை மடக்கி சோதனையிட்டபோது லாரியில் ரூ.3 லட்சத்து 89 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து லாரி டிரைவர் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவரிடம் விசாரணை நடத்தினர். ஆனால் பணத்திற்கான சரியான ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படை தனி வட்டாட்சியர் சுனில் குமாரிடம் ஒப்படைத்தனர். சரியான ஆவணங்களை ஒப்படைத்து விட்டு பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.பத்மநாபபுரம் தொகுதியில் நாகர்கோவில் கோட்ட ஆய அலுவலர் சரளாகுமாரி தலைமையிலான பறக்கும் படையினர் ஆற்றூர் அருகே தேமானூரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காரில் ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 500-ஐ பிடித்தனர். பின்னர் அந்த பணம் திருவட்டார் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.சிறப்பு தாசில்தார் ராஜா தலைமையிலான பறக்கும் படையினர் நேற்று ஆரல்வாய்மொழி அருகே வி.டி.சி நகரில் வாகன சோதனை நடத்திய போது, ஒரு டெம்போவில் ரூ.90 ஆயிரம் பிடிபட்டது. டிரைவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த சுல்பி (வயது 28) என்பதும், வியாபாரத்துக்கு மீன் வாங்குவதற்காக பணத்தை கொண்டு சென்றதும் தெரிய வந்தது. அநத பணத்தை அதிகாரிகள் தோவாளை தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.News