" “If opportunity doesn't knock, build a door.”"

மகளிர் சுயஉதவிக்குழுவினர் விழிப்புணர்வு பேரணி

Views - 314     Likes - 0     Liked


  • குமரி மாவட்டத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி தமிழக சட்டசபை பொதுத்தேர்தலுடன் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடக்கிறது. குமரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 67 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இந்த தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
     
     
    கடந்த சில தினங்களுக்கு முன்பு கன்னியாகுமரி கோவளம் கடற்கரை பகுதியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் அரவிந்த் பாராசூட்டில் பறந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்தநிலையில் நேற்று சுய உதவிக்குழு பெண்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கியது. பேரணியை மகளிர் திட்ட அதிகாரி மெர்சி ரம்யா தொடங்கி வைத்தார். பேரணியில் மகளிர் திட்ட இயக்குனர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.
     
    பேரணி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி டதி பள்ளி சந்திப்பு, கோர்ட்டு ரோடு வழியாக வேப்பமூடு மாநகராட்சி பூங்கா முன்பு நிறைவடைந்தது. பேரணியில் பங்கேற்ற பெண்கள் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர். விழிப்புணர்வு வாசகம் அடங்கிய தொப்பிகளையும் பலர் தலையில் அணிந்திருந்தனர். இந்த பேரணியில் நூற்றுக்கணக்கான சுய உதவிக்குழு பெண்கள் பங்கேற்றனர். சில சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் ஒரே நிறத்தில் சேலை அணிந்து கலந்து கொண்டனர். முன்னதாக நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி சுய உதவிக்குழு பெண்கள் விழிப்புணர்வு கோலங்கள் வரைந்தனர். இதை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் சுயஉதவிக்குழு பெண்கள் வரைந்த கோலம் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாகவும், வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், வாக்காளர் பட்டியலில் பெயர், முகவரி, பாலினம் மாற்றங்களை மேற்கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அமைந்திருந்தன.
    News