" “If opportunity doesn't knock, build a door.”"

வாகையடி பக்கீர் பாவா ஒலியுல்லா தர்கா கந்தூரி விழா கொடியேற்றம்

Views - 268     Likes - 0     Liked


  • திட்டுவிளை பக்கீர் பாவா தர்கா கந்தூாி பெருவிழா கொடிேயற்றம் நேற்று நடைபெற்றது.குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தர்காக்களில் பூதப்பாண்டி அருகே உள்ள திட்டுவிளை, மகான் வாகையடி பக்கீர் பாவா ஹயாத் அவுலியா தர்காவும் ஒன்று. இந்த தர்காவில் வருடாந்திர பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
     
    இந்த ஆண்டுக்கான வருடாந்திர கந்தூரி பெருவிழா கடந்த, 2-ந் தேதி தொடங்கியது. தினமும் மாலை 4 மணிக்கு மவுலூது ஓதுதல் மற்றும் பக்தர்களால் நேர்ச்சை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
     
    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பிறைக்கொடியேற்றும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி தர்காவில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஜமாத் இமாம் அசன் அலியார், தர்கா இமாம் அப்துல் லத்தீப், நல்லாசிரியர் முகமது ஜாபர் உள்ளிட்டோர் துவா ஓதினார்கள். இதில் ஜமாத் தலைவர் மைதீன் பிள்ளை, தர்கா நிர்வாக தலைவர் உதுமான் மைதீன், செயலாளர் முகமது ரபீக், பொருளாளர் சேக் முகம்மது, ஒருங்கிணைப்பாளர்கள், ஆலோசனைக் கமிட்டி உறுப்பினர்கள், விழா கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
     
    பின்னர் தர்காவில் இருந்து பிறைக்கொடி எடுத்து வந்து தர்கா மைதானத்தின் முன்பாக உள்ள அலங்கார கொடி மரத்தில் இறைநாம முழக்கத்துடன் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்திருந்த பக்தர்களால் அனைவருக்கும் நேர்ச்சை வழங்கப்பட்டது.
     
    அதைத் தொடர்ந்து முஸ்லீம்கள் புனிதம் நிறைந்த இரவாக கருதப்படும், மிஹ்ராஜ் இரவு என்பதையொட்டி, இஸ்லாமிய மார்க்கப் பேருரை நடந்தது. இதில் உதுமான் லெப்பை, சாகிபு சுன்னத் ஜமாத் பள்ளி அறக்கட்டளை தலைவர் மைதீன் பிள்ளை தலைமை தாங்கினார். அல்ஹாபிழ், ஷேக்ஹஸன் அலியார் ஸமதானி இமாம், வரவேற்புரை ஆற்றினர். ஓய்வு பெற்ற வன அலுவலர் முகமது ஹனிபா, ஓய்வு பெற்ற, பி.எஸ்.என்.எல். உதவிப் பொறியாளர் அப்துல் ஹலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குளச்சல் செய்யது மீர் காஸிம் ஆலிம் சிறப்புரையாற்றினார்.
     
    முடிவில் தர்கா நிர்வாக தலைவர் உதுமான் மைதீன் நன்றி கூறினார். விழாவின் கடைசி நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு தப்றூக் என்கிற நேர்ச்சை வழங்கப்படுகிறது. மாலை 6.30 மணிக்கு இஸ்லாமிய இன்னிசை கச்சேரி நடக்கிறது. முடிவில் தர்கா நிர்வாக செயலாளர் முகமது ரபீக் நன்றி கூறுகிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை திட்டுவிளை, உதுமான் லெப்பை, சாகிபு சுன்னத் ஜமாத் ஜூம்மா பள்ளி டிரஸ்ட் நிர்வாகம் மற்றும் தர்கா நிர்வாகத்தினருடன், பொதுமக்களும் இணைந்து செய்துள்ளனர்.
    News