" “If opportunity doesn't knock, build a door.”"

வலம்புரிவிளை குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து

Views - 275     Likes - 0     Liked


  • நாகர்கோவில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் உருவான நச்சு புகையால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
    குப்பை கிடங்கு 
    நாகர்கோவில் மாநகராட்சியில் 52 வார்டுகளிலும் வீடுகள் மற்றும் கடைகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் பீச்ரோடு வலம்புரிவிளையில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வந்தது. இதனால் அங்கு குப்பைகள் மலைபோல குவிந்து கிடக்கின்றன. சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் இந்த குப்பை குவியலால் அப்பகுதி மக்கள் தினமும் அவதிப்பட்டு வருகிறார்கள். ஏன் எனில் குப்பை குவியலில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது.
    எனவே குப்பை கிடங்கை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் கோரிக்கை வைத்தனர். இதைத் தொடர்ந்து வலம்புரிவிளை குப்பை கிடங்கில் குப்பைகள் கொட்டுவது நிறுத்தப்பட்டது. அதற்கு பதிலாக வீடுகள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் குப்பைகள் தரம்பிரித்து வாங்கப்பட்டு 11 இடங்களில் உரமாக்கப்படுகிறது. மேலும் வலம்புரிவிளையில் உள்ள குப்பைகளையும் படிப்படியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    தீ விபத்து 
    வலம்புரிவிளை குப்பை குவியலில் தீப்பிடிப்பதும், அதை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைப்பதும் தொடர் கதையாகி உள்ளது. இந்த நிலையில் குப்பை கிடங்கில் நேற்று காலை 8 மணி அளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. முதலில் குப்பை கிடங்கின் நுழைவு வாயில் அருகே தீப்பிடித்தது. அப்போது பலத்த காற்று காரணமாக தீ மளமளவென பரவத்தொடங்கியது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மாநகராட்சி ஊழியர்கள் உடனே தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
    அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் 2 வாகனங்களில் அங்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் சுட்டெரிக்கும் வெயில் மற்றும் காற்று காரணமாக தீயை அணைக்க முடியவில்லை. எனவே கூடுதலாக 3 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. குப்பை குவியலின் அனைத்து பகுதிகளிலும் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க வீரர்கள் போராடினர். ஆனாலும் தீ பரவலை கட்டுப்படுத்துவது சிரமமாக இருந்தது.
    புகை மண்டலம் 
    மேலும் தீ காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. வீடுகளுக்குள்ளும், ஆஸ்பத்திரிகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்குள்ளும் புகை சென்றது. இந்த நச்சு புகையால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். 
    இதனால் பீச்ரோடு சந்திப்பில் இருந்து இருளப்பபுரம் செல்லும் சாலை மூடப்பட்டது.
    ஏன் எனில் சாலையே தெரியாத அளவு புகை சூழ்ந்து இருந்தது. இதனால் பாதுகாப்பு கருதி சாலையை தற்காலிகமாக போலீசார் மூடினர். அதைத் தொடர்ந்து அந்த வழியாக செல்ல வேண்டிய வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.
    News