குமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகம் அருகே கடந்த 9-ந் தேதி முதியவர் ஒருவர் தலையில் கல்லைப்போட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்த குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ் சாஸ்திரி, இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் படுகொலை செய்யப்பட்டவர் மண்டைக்காடு அருகே கருமன்கூடலை சேர்ந்த செல்லநாடார் (வயது 67) என்பது தெரிய வந்தது. கடந்த சில மாதமாக இவர் குளச்சல் மீன் பிடித்துறைமுக பகுதியில் பிச்சை எடுத்து இரவு நேரங்களில் அந்த பகுதியில் உள்ள கடை திண்ணையில் படுத்து தூங்கி வந்துள்ளார். இந்தநிலையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். மேலும், கொலையாளிகளை பிடிக்க உதவி போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு துப்பு துலக்கி வந்தனர். தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
இதையடுத்து இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக திங்கள்நகர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவனையும், வெள்ளிச்சந்தை ஈத்தன்காடை சேர்ந்த ராஜ்குமார் (46) என்பவரையும் கைது செய்தனர்.
இதுகுறித்து குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ் சாஸ்திரி கூறியதாவது:-
கொலை வழக்கில் கைதான சிறுவன் திங்கள்நகர், குளச்சல் பகுதியில் நடந்த சில திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டவன். சம்பவத்தன்று பணத்திற்கு ஆசைப்பட்டு முதியவர் மீது கல்லைப்போட்டு கொன்று விட்டு, அவரிடம் இருந்த பிச்சை எடுத்த பணத்தை கொள்ளையடித்துவிட்டு துறைமுகப்பகுதியில் நின்ற ஒரு மொபட்டையும் திருடி சென்றுள்ளான். சிறுவனுக்கு உதவியாக ராஜ்குமார் ஈடுபட்டுள்ளார். அவர்களிடம் இருந்து மொபட் மற்றும் முதியவரிடம் இருந்து எடுத்த பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கொலை வழக்கில் தொடர்புடைய சிறுவனுக்கு 16 வயதே ஆவதால் திருநெல்வேலியில் உள்ள சிறுவர் சீர்த்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்படுவான். சிறுவனுக்கு உதவியாக இருந்த ராஜ்குமார் இரணியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்.
இந்த வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க கண்காணிப்பு கேமரா காட்சிகள் பெரிதும் உதவியாக இருந்தது.இவ்வாறு அவர் கூறினார்.