சாமிதோப்பில் போலீஸ்காரரின் மனைவி தூக்குபோட்டு தற்கொலை – ஆர்.டி.ஓ.விசாரணை
Views - 267 Likes - 0 Liked
-
சாமிதோப்பு மேலத்தெருவை சேர்ந்தவர் நாகராஜன்(வயது28). இவர் நாகர்கோவில் ஆயுதப்படை போலீசில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஷிவானி (22). இவர்களுக்கு திருமணமாகி 1½ ஆண்டு ஆகிறது.
ஷிவானியின் சமையல் நாகராஜனுக்கு பிடிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு நாகராஜன் வேலைக்கு புறப்பட்டு செல்வதற்கு முன்பு சாப்பிட அமர்ந்துள்ளார்.
சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே சமையல் சரியில்லை என்று மனைவியிடம் கூறியுள்ளார். இதனால் ஷிவானி மனவேதனை அடைந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நாகராஜன் வேலைக்குச் சென்று விட்டார்.
கணவர் வேலைக்கு சென்றதும் வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்ட ஷிவானி, தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன், தென்தாமரைகுளம் சப்-இன்ஸ்பெக்டர் ஜாண் கென்னடி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
ஷிவானி தற்கொலை செய்து கொள்ள குடும்ப தகராறு தான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சினை காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தினர். ஷிவானிக்கு திருமணமாகி ஒன்றரை வருடங்களே ஆவதால், வரதட்சணை கொடுமை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்று ஆர்.டி.ஓ. மயில் விசாரணை நடத்தி வருகிறார்.
News