" “If opportunity doesn't knock, build a door.”"

குமரியில் 86 பேருக்கு கொரோனா சிகிச்சை

Views - 290     Likes - 0     Liked


  • குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 86 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.குமரி மாவட்டத்தில் படிப்படியாக குறைந்து வந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. மக்கள் முக கவசம் அணியாமல் பொது இடங்களில் நடமாடுவதாலும், சமூக இடைவெளி கடைப்பிடிப்பதை கைவிட்டதாலும் பாதிப்பு உயர தொடங்கி இருக்கிறது. நாகர்கோவிலில் ஏற்கனவே கல்லூரி முதல்வர், பேராசிரியர், பள்ளி மாணவர், வங்கி அதிகாரிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கல்லூரி, பள்ளி மற்றும் வங்கியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
     
     
    மேலும் நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களுடன் பழகியவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பு ஒரு நாளில் 26 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
     
    இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 11 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அவர்கள் அனைவரும் நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அந்த வகையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 86 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகிறார்கள். 13 பேர் தனிமைப்படுத்தும் வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
     
    இது ஒருபுறம் இருக்க குமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு குமரி மாவட்ட எல்லை பகுதியில் 3 இடங்களில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் முக கவசம் அணிய வலியுறுத்தப்பட்டு உள்ளது. அதோடு முக கவசம் அணியாமல் பொது இடங்களில் நடமாடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
     
    நாகர்கோவில் மாநகராட்சியில் கடைகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள் என அனைத்து இடங்களிலும் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை நடத்தி முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்காத நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது.
     
    மேலும் முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு பறக்கும் படையினரும் அபராதம் விதிக்க தொடங்கி இருக்கிறார்கள். தினமும் நடைபெறும் வாகன சோதனையில் பெரும்பாலும் முக கவசம் அணியாதது தொடர்பாக அபராதம் விதிப்பதே அதிகரிக்கப்பட்டு உள்ளது.
    News