தமிழக சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் - புதிய எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி ஏற்பு
Views - 281 Likes - 0 Liked
-
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. அமோகமாக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்-அமைச்சராக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 7-ந்தேதி கவர்னர் மாளிகையில் பதவியேற்றார். இதனை தொடர்ந்து தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இந்த கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றுக்கொள்கின்றனர்.
அவர்கள் பதவியேற்றுக்கொள்வதற்கு வசதியாக தற்காலிக சபாநாயகராக தி.மு.க.வை சேர்ந்த கீழ்ப்பெண்ணாத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கு.பிச்சாண்டியை கவர்னர் பன்வாரிலால் புரோகித் நியமித்துள்ளார். இதன்படி, சட்டசபை தற்காலிக சபாநாயகராக, கவர்னர் முன்னிலையில் கு.பிச்சாண்டி நேற்று பதவியேற்றுக்கொண்டார்.இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலாளர் வெ.இறையன்பு மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். தற்காலிக சபாநாயகராக பதவியேற்றுள்ள கு.பிச்சாண்டி தமிழக சட்டசபை தேர்தலில் 8 முறை தி.மு.க. சார்பில் போட்டியிட்டு 6 முறை வெற்றி பெற்றவர் ஆவார்.இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கும் சட்டசபை கூட்டத்தில் கு.பிச்சாண்டி முன்னிலையில் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்று கொள்கின்றனர். இதைத் தொடர்ந்து நாளை (புதன்கிழமை) சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.இன்று காலை 10 மணி அளவில் சட்டசபை கூடுகிறது. அதன் பின்னர் முதல்-அமைச்சர், அமைச்சர்கள், ஒவ்வொரு கட்சித்தலைவர்கள் என அத்தனை உறுப்பினர்களுக்கும் அகர வரிசைப்படி பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட உள்ளது. அனைத்து கட்சியினருக்கும் இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.News