" “If opportunity doesn't knock, build a door.”"

இத்தாலி ஓபன் டென்னிஸ்: செரீனா, ஒசாகா அதிர்ச்சி தோல்வி

Views - 257     Likes - 0     Liked


  • இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது. களிமண் தரை போட்டியான இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரரும், நடப்பு சாம்பியனுமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 7-6 (7-5) என்ற நேர் செட்டில் டெய்லர் பிரைட்சை (அமெரிக்கா) தோற்கடித்து 3-வது சுற்றை எட்டினார். மற்றொரு ஆட்டத்தில் டொமினிக் திம் (ஆஸ்திரியா) 3-6, 7-6 (7-5), 6-0 என்ற செட் கணக்கில் மார்டோன் புக்சோவிக்சை (ஹங்கேரி) வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார். அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா), பாவ்டிஸ்டா அகுட் (ஸ்பெயின்) ஆகியோரும் வெற்றிகரமாக 2-வது தடையை கடந்தனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் நவோமி ஒசாகா (ஜப்பான்) அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார். அவரை 7-6 (7-2), 6-2 என்ற நேர் செட்டில் 31-ம் நிலை வீராங்கனையான ஜெஸ்சிகா பெகுலா (அமெரிக்கா) விரட்டினார். இதே போல் பிப்ரவரி மாதத்துக்கு பிறகு களம் திரும்பிய முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், 4 முறை சாம்பியனுமான செரீனா வில்லியம்சும் (அமெரிக்கா) வீழ்ந்தார். அவரை 7-6 (8-6), 7-5 என்ற நேர் செட்டில் 24 வயதான நடியா போடோரோஸ்கா (அர்ஜென்டினா) வெளியேற்றினார். 39 வயதான செரீனாவுக்கு இது ஆயிரமாவது (851 வெற்றி, 149 தோல்வி) ஆட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
     
    அதே சமயம் நேரடியாக 2-வது சுற்றில் அடியெடுத்து வைத்த ‘நம்பர் ஒன்’ வீராங்கனையான ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) தன்னை எதிர்த்த ஷிவ்டோவாவை (கஜகஸ்தான்) 6-4, 6-1 என்ற நேர் செட்டில் எளிதில் வென்றார். மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) 2-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் அனிசிமோவாவை (அமெரிக்கா) போராடி சாய்த்தார். கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), முகுருஜா (ஸ்பெயின்), சபலென்கா (பெலாரஸ்), ஆஸ்டாபென்கோ (ஆஸ்திரியா), கோகோ காப் (அமெரிக்கா), ஸ்வியாடெக் (போலந்து) ஆகியோரும் தங்களது 2-வது சுற்றில் வெற்றி கண்டனர்.
    News