விம்பிள்டன் டென்னிஸ்: கலப்பு பிரிவில் போபண்ணா-சானியா ஜோடி வெற்றி
Views - 259 Likes - 0 Liked
-
லண்டன்,‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 7- ம் நிலை வீரர் ரஷியாவின் ஆந்த்ரே ரூப்லெவ் 6-3, 5-7, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் இத்தாலியின் போக்னினியை வீழ்த்தி 4-வது சுற்றை எட்டினார். நடப்பு சாம்பியன் ஜோகோவிச்(செர்பியா), பாடிஸ்டா அகுட்(ஸ்பெயின்), கிறிஸ்டியன் காரின் (சிலி), கச்சனோவ் (ரஷியா) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.முன்னதாக நேற்று முன்தினம் இரவு நடந்த 2-வது சுற்றில் 8 முறை சாம்பியனான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 7-6 (7-1), 6-1, 6-4 என்ற நேர் செட்டில் பிரான்சின் கேஸ்கியூட்டை வீழ்த்தி 3-வது சுற்றை எட்டினார். இதன் மூலம் விம்பிள்டனில் கடந்த 46 ஆண்டுகளில் அதிக வயதில் 3-வது சுற்றை அடைந்த வீரர் என்ற பெருமையை 39 வயதான பெடரர் பெற்றார். பெடரர் அடுத்து இங்கிலாந்தின் கேமரூன் நோரியுடன் மோதுகிறார்.பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-1, 6-0 என்ற நேர் செட்டில் கேமிலியா பெகுவை (ருமேனியா) ஊதித்தள்ளி முதல் நபராக 4-வது சுற்றுக்குள் நுழைந்தார். தரவரிசையில் 4-வது இடம் வகிக்கும் சபலென்கா (பெலாரஸ்) 6-0, 6-3 என்ற நேர் செட்டில் ஓசோரியா செரனோவை (கொலம்பியா) துவம்சம் செய்தார்.இதே போல் கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), ரைபகினா (கஜகஸ்தான்) ஆகியோரும் 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.கலப்பு இரட்டையர் பிரிவின் முதலாவது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- சானியா மிர்சா கூட்டணி, மற்றொரு இந்திய இணையான ராம்குமார்-அங்கிதா ரெய்னாவை சந்தித்தது. ஓபன் எரா (1968-ம் ஆண்டுக்கு பிறகு) காலக்கட்டத்தில் கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றில் முழுமையான இரண்டு இந்திய ஜோடிகள் நேருக்கு நேர் மல்லுகட்டியது இதுவே முதல் நிகழ்வாகும். வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஆட்டத்தில் அனுபவம் வாய்ந்த போபண்ணா-சானியா ஜோடியினர் 6-2, 7-6 (7-5) என்ற நேர் செட்டில் 69 நிமிடங்களில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினர். கிராண்ட்ஸ்லாம் போட்டியில் கால்பதிக்க நீண்ட காலம் போராடிய தமிழக வீரர் ராம்குமாரின் கனவு இந்த ஆட்டத்தின் மூலம் நனவானது அவருக்கு ஆறுதலான விஷயமாகும்.News