" “If opportunity doesn't knock, build a door.”"

வெற்றி, தோல்வி வாழ்வின் ஓர் அங்கம்; வீரர்களால் நாடு பெருமை கொள்கிறது: பிரதமர் மோடி

Views - 267     Likes - 0     Liked


  • புதுடெல்லி,
     
    டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஆக்கி போட்டியில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய முதலாவது அரை இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, உலக சாம்பியனும், தரவரிசையில் 2-வது இடத்திலும் உள்ள அணியான பெல்ஜியத்துடன் விளையாடியது.
     
    இந்திய அணி லீக் சுற்றில் ஆஸ்திரேலியா தவிர மற்ற எல்லா அணிகளையும் வீழ்த்தி ‘ஏ’ பிரிவில் 2-வது இடம் பிடித்தது. அடுத்து கால்இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணியை வெளியேற்றி அரைஇறுதிக்குள் நுழைந்தது.
     
    ‘பி’ பிரிவில் 4 வெற்றி, ஒரு டிராவுடன் முதலிடம் பிடித்த பெல்ஜியம் அணி, கால்இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. பெல்ஜியம் அணி இந்த தொடரில் இதுவரை 29 கோல்கள் அடித்து அசத்தி இருக்கிறது. இந்திய அணி, பெல்ஜியத்துக்கு எதிரான கடைசி 5 ஆட்டங்களில் 4-ல் வெற்றி பெற்று இருப்பதால் நம்பிக்கை ஏற்படுத்தியது.
     
    போட்டியின் முதல் கால் இறுதியில் பெல்ஜியம் அணியின் லுப்பர்ட் 2வது நிமிடத்தில் முதல் கோல் அடித்து கோல் கணக்கை துவக்கினார்.  இதன்பின் இந்தியாவுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்து, அதனை இந்திய அணியின் ஹர்மன்பிரீத் சிங் 7வது நிமிடத்தில் கோலாக்கினார்.
     
    இதனால் போட்டி 1-1 என சமநிலை பெற்றது.  அடுத்த நிமிடத்தில், இந்தியாவின் அமித் ரோகிதாஸ் அடித்த பந்து, மன்தீப் சிங்கிடம் சென்றது.  அதனை அவர் கோலாக்கினார்.  இதனால், முதல் கால் இறுதியில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
     
    அதன்பின் 2வது கால் இறுதி நடந்தது.  இதில் போட்டியின் 19வது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் அலெக்சாண்டர் ஹெண்டிரிக்ஸ் அடித்த கோலால் 2-2 என ஆட்டம் சமன்பெற்றது.  2வது கால் இறுதி முடிவில் இரு அணிகளும் தலா 2 கோல்களுடன் சமநிலையில் இருந்தன.
     
    தொடர்ந்து நடந்த போட்டியில் 33வது மற்றும் 36வது நிமிடங்களில் இந்திய அணியினர், எதிரணி பகுதிக்குள் நுழைந்து அதிரடியாக விளையாடினர்.  எனினும் தடுப்பு அரணாக இருந்து கோல் அடிக்க விடாமல் பெல்ஜியம் அணி தடுத்தது.
     
    இதன்பின் 39வது நிமிடத்தில் இந்தியாவுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது.  எனினும், ஹர்மன்பிரீத் சிங் அடித்த பந்து கோலாகவில்லை.  போட்டியின் 3வது கால் மணிநேர முடிவில் இரு அணிகளும் சம நிலையில் இருந்தன.
     
    இந்நிலையில், போட்டியின் 4வது மற்றும் கடைசி கால் மணிநேரத்தில் பெல்ஜியம் அணிக்கு அடுத்தடுத்து 3 பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தன.
     
    அதில் 3வது வாய்ப்பு கோலானது.  அந்த அணியின் அலெக்சாண்டர் ஹெண்டிரிக்ஸ் 49வது நிமிடத்தில் அந்த கோலை அடித்துள்ளார்.  இதன்பின், 53வது மற்றும் 59வது நிமிடங்களில் பெல்ஜியம் அணி அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்தன.  இதனால் போட்டி முடிவில் 5-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் வெற்றி பெற்றுள்ளது.
     
    இந்நிலையில், பிரதமர் மோடி வெளியிட்டு உள்ள டுவிட்டர் செய்தியில், வெற்றிகளும் தோல்விகளும் வாழ்வின் ஓர் அங்கம்.  டோக்கியோ ஒலிம்பிக்கில் நம்முடைய ஆடவர் ஆக்கி அணி வீரர்கள் சிறந்த விளையாட்டை வழங்கினர்.  அடுத்த போட்டியில் சிறப்புடன் விளையாட வாழ்த்துகள்.  வருங்காலங்களிலும் சிறந்த முறையில் செயல்பட எனது வாழ்த்துகள்.  நமது விளையாட்டு வீரர்களால் நாடு பெருமை கொள்கிறது என தெரிவித்து உள்ளார்.
    News