தேசிய ஓபன் தடகளம்: கடைசி நாளில் தமிழகத்திற்கு மேலும் 2 தங்கப்பதக்கம்
Views - 247 Likes - 0 Liked
-
60-வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் கடந்த 15-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது. கடைசி நாளான நேற்று தமிழகத்திற்கு மேலும் இரண்டு தங்கப்பதக்கம் கிட்டியது. ஆண்களுக்கான மும்முறை நீளம் தாண்டுதலில் (டிரிபிள் ஜம்ப்) தமிழக வீரர் 20 வயதான பிரவீன் சித்திரைவேல் 16.88 மீட்டர் நீளம் தாண்டி தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். தனிப்பட்ட முறையில் அவரது சிறந்த செயல்பாடு இதுவாகும். சர்வீசஸ் வீரர் அப்துல்லா அபூபக்கர் 16.84 மீட்டர் நீளம் தாண்டி வெள்ளிப்பதக்கத்தை பெற்றார். ஆசிய விளையாட்டு சாம்பியனான அர்பிந்தர்சிங் 6-வது இடத்துக்கு (15.91 மீட்டர்) தள்ளப்பட்டார்.
பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை அர்ச்சனா (23.58 வினாடி) முதலாவதாக வந்து தங்கப்பதக்கத்தை ருசித்தார். டெல்லியின் ‘இளம் புயல்’ தரன்ஜீத் கவுர் (23.64 வினாடி) வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். தரன்ஜீத் 100 மீட்டர் ஓட்டத்தில் மகுடம் சூடியவர் ஆவார். ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் அசாம் வீரர் அம்லான் போர்கோஹைன் புதிய போட்டி சாதனையுடன் (20.75 வினாடி) தங்கப்பதக்கமும், தமிழகத்தின் பாலகுமார் நிதின் வெள்ளிப்பதக்கமும் (21.06 வினாடி) வென்றனர். இந்த தொடரில் தமிழக வீராங்கனை வித்யா 400 மீட்டர் ஓட்டம், தடை ஓட்டம், கலப்பு தொடர் ஓட்டம் ஆகிய 3 பந்தயங்களில் தங்கப்பதக்கத்தை வசப்படுத்தி கவனிக்கத்தக்க வீராங்கனையாக ஜொலித்தார்.5 நாள் நடந்த போட்டி நிறைவில் ரெயில்வே 13 தங்கம், 10 வெள்ளி, 13 வெண்கலம் என்று 36 பதக்கங்களுடன் முதலிடத்தையும், தமிழ்நாடு 7 தங்கம், 7 வெள்ளி, 2 வெண்கலம் என்று 16 பதக்கத்துடன் 2-வது இடத்தையும், சர்வீசஸ் அணி 6 தங்கம் உள்பட 30 பதக்கத்துடன் 3-வது இடத்தையும் பிடித்தன.News