" “If opportunity doesn't knock, build a door.”"

பட்டாசுகளுக்கு கட்டுப்பாடுகள்? - சுப்ரீம்கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை

Views - 258     Likes - 0     Liked


  • பட்டாசு வெடிக்கும் நேரத்தை தளர்த்த கோரி, சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் இடைக்கால மனு தாக்கல் செய்தது. இம்மனுவை நீதிபதி எம்.ஆர்.ஷா, ஏ.எஸ். போபண்ணா தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது.

    தமிழ்நாடு பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் மூத்த வக்கீல் ஏ.என்.எஸ்.நத்கர்னி, ‘‘நடப்பாண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 4-ந்தேதி கொண்டாடப்படவுள்ளது. தமிழ்நாடு பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம், சிவகாசியிலுள்ள வெடிபொருள் பாதுகாப்பு நிறுவனத்தின் வெடிபொருள் கட்டுப்பாடு இணை இயக்குனரிடம் கடந்த ஆகஸ்டு 31-ந்தேதி அளித்த கோரிக்கை மனுவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும்’’ என வாதிட்டார்.
     
    இதற்கு பதிலளித்த நீதிபதிகள், “சிலரின் வேலைவாய்ப்பு என்ற போர்வையில், பிற மக்களின் வாழும் உரிமையை பறிக்க முடியாது. வேலைவாய்ப்புக்கும், வேலையின்மை மற்றும் குடிமக்களின் வாழ்வதற்கான உரிமைக்கும் இடையிலான விஷயங்களை சமமாக பார்த்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். பசுமைப் பட்டாசுகளுக்கு நிபுணர்கள் குழு ஒப்புதல் அளித்தால், அதற்கு ஏற்றாற்போல உத்தரவுகளை பிறப்பிப்போம். சட்டங்கள் இருக்கின்றன. அவை அமல்படுத்தப்பட வேண்டும். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். இருப்பினும் ஏதுமறிய குடிமக்களின் வாழும் உரிமை குறித்து அக்கறை கொள்ள வேண்டியுள்ளது” என்று அவர்கள் தெரிவித்தனர். 
     
    மேலும் ஒவ்வொரு நாளும் மத நிகழ்வுகள், அரசியல், தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறி ஆயிரம் வாலா, 10 ஆயிரம் வாலா சர வெடிகள் அதிக அளவில் வெடிக்கப்படுகின்றன. இது கவலை அளிக்கிறது. இதற்கு உரிய அதிகாரிகளை பொறுப்பாக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
     
    இந்நிலையில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை தளர்த்த கோரி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனு மீதான விசாரணை இன்றும் (புதன்கிழமை) நடைபெற உள்ளது. முன்னதாக தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளின்போது காலையில் ஒரு மணி நேரம், இரவில் ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இதை உத்தரவை மறுபரிசீலனை செய்து, பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்று கோரி தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி காலையில் 4 மணி நேரமும், மாலையில் 4 மணி நேரமும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

     

    News