" “If opportunity doesn't knock, build a door.”"

லீக் போட்டியில் தோல்வி: முகமது ஷமிக்கு குரல் கொடுக்கும் பிரபலங்கள்!

Views - 235     Likes - 0     Liked


  • துபாயில் நடந்த உலகக் கோப்பை டி 20 போட்டியில், பாகிஸ்தானுடன் லீக் போட்டியில் மோதிய இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் 17.5 ஓவர்களில் 152 ரன்கள் எடுத்து தங்கள் அணியை வெற்றி பெறச் செய்தனர். 
     
    இந்த போட்டியில் இந்திய பந்துவீச்சாளர் முகமது ஷமி, 3.5 ஓவர்கள் வீசி 43 ரன்களை வாரி வழங்கினார். இதனையடுத்து, இந்திய அணியின் தோல்விக்கு ஷமியின் பந்துவீச்சும் முக்கிய காரணம் என சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக கருத்துக்களை பலரும் பதிவிட்டு வருகின்றனர். மேலும் முகமது ஷமியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், குடும்பத்தினர் குறித்தும் மோசமான கருத்துக்களை பதிவிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் முகமது ஷமிக்கு ஆதரவாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
     
    இதுதொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டரில், “முகமது ஷமி.. நாங்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறோம். இந்த மனிதர்களுக்கு யாரும் அன்பை தராததால், அவர்கள் வெறுப்பால் நிரம்பி இருக்கிறார்கள். அவர்களை மன்னித்துவிடுங்கள்” என்று பதிவிட்டுள்ளார். 
     
    இதுதொடர்பாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா தனது டுவிட்டரில், “பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணியில் விளையாடிய 11 பேரில் முகமது ஷமியும் ஒருவர். முகமது ஷமி மட்டும் தனியாக விளையாடவில்லை. உங்கள் சக வீரர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் மோசமாக அறுவறுக்கத்தக்க வார்த்தைகளால் ட்ரோல் செய்யப்படும்போது, அவருக்கு ஆதவாரக நிற்காமல், கறுப்பின மக்களுக்கு ஆதரவாக இந்திய அணியினர் அனைவரும் மைதானத்தில் முழங்கால் இட்டு ஆதரவு தெரிவித்தது எந்தவிதத்திலும் பொருட்படுத்த முடியாது” என்று பதிவிட்டுள்ளார். 
     
    இதுதொடர்பாக  முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டரில், “இந்திய அணியை நாம் ஆதரிக்கிறோம் என்றால் இந்தியாவுக்காக விளையாடும் வீரர்களையும் நாம் ஆதரிக்க வேண்டும். முகமது ஷமி உலகத்தரமான பந்துவீச்சாளர். மற்ற வீரர்களை போலவே, அன்று ஷமிக்கு மோசமான நாளாக அமைந்துவிட்டது. நான் முகமது ஷமிக்கு பின்னாலும், இந்திய அணிக்கு பின்னாலும் நிற்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். 
     
    முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் தனது டுவிட்டரில், “முகமது ஷமி மீது நடத்தப்படும் சமூகவலைதள தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது. நாங்கள் அவரோடு துணை நிற்கிறோம். அவர் ஒரு சாம்பியன். யார் ஒருவர் இந்திய அணியின் தொப்பியை தங்கள் தலை மீது சூட்டுகிறார்களோ அவர்கள் இந்திய நாட்டை தங்கள் இதயத்தில் ஏந்தி நிற்கிறார்கள் என்று அர்த்தம். எந்த ஒரு சமூக வலைதள கும்பலை விடவும் அவர்களுக்கு தேசப்பற்று அதிகம் . உங்களோடு இருக்கிறோம் ஷமி” என்று பதிவிட்டுள்ளார். 
     
    முன்னாள் கிரிக்கெட் பிரபலமான, விவிஎஸ் லட்சுமணன் தனது டுவிட்டரில், “சுமார் எட்டு வருடங்களாக இந்திய அணிக்கு மிகச் சிறந்த பந்து வீச்சாளராக விளங்குகிறார் முகமது ஷமி. பல வெற்றிகளில் முக்கிய பங்காற்றியவர் அவர். ஒரே ஒரு போட்டியை வைத்து அவரது திறமையை மதிப்பீடு செய்யக்கூடாது . அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் எப்போதும் இருக்கிறது. ரசிகர்களுக்கு என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால் முகமது ஷமி மற்றும் இந்திய அணிக்கு இப்போது உங்கள் ஆதரவு தேவை” என்று பதிவிட்டுள்ளார். 
     
    இதுதொடர்பாக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் தனது டுவிட்டரில், “இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியபோது நானும் அணியில் இருந்துள்ளேன். அப்போதும் இந்தியா தோற்று இருக்கிறது. ஆனால் என்னை நீங்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டும் என்று யாரும் சொன்னது கிடையாது. ஆனால் நான் பேசுவது சில வருடங்களுக்கு முந்தைய இந்தியாவை. இது போன்ற முட்டாள்தனம் நிறுத்தப்பட வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
     
    முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது டுவிட்டரில், “முகமது ஷமி நாங்கள் உங்களை காதலிக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார். முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆர்பி சிங் தனது டுவிட்டரில், “முகமது ஷமி இந்திய கிரிக்கெட் வீரர். நாங்கள் அவருக்காக பெருமைப்படுகிறோம். பாகிஸ்தானுடன் அடைந்த தோல்விக்காக அவரை குறி வைப்பது மோசமான செயல்” என்று பதிவிட்டுள்ளார். 
     
    இதுதொடர்பாக கருத்து தெரிவித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், “நீங்கள் ஒரு போட்டியில் பங்கேற்று விளையாடச் செல்லும்போது, ​​நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் செல்வீர்கள். எதிரணி வீரரிடம் கைகுலுக்குவதோ அல்லது ஒருவரை கட்டிப்பிடிப்பதோ தவறில்லை. ஆனால் நீங்கள் களத்தில் ஒரு போட்டியில் விளையாடும்போது நட்பு எல்லாம் பார்ப்பதில்லை. வெல்ல வேண்டும் என்று தான் விளையாடுகிறோம். நமது அணி வெற்றி பெற்றாலும் சரி, தோற்றால் சரி, அது நமது நாட்டுக்காக விளையாடும் அணி, அதில் தனி நபரை குறிவைப்பது சரியல்ல.
     
    இந்தியாவுக்காக விளையாடும் வீரர்கள் நாட்டுக்காக இரத்தத்தையும் வியர்வையையும் சிந்தியவர்கள். இந்தியாவிற்காக இவ்வளவு காலமாக விளையாடி, போட்டிகளில் வெற்றி பெற்றவரை, எந்தவொரு சமூகத்துடனும் ஒப்பிட்டு பேசுவது வெட்கக்கேடானது. நாம் அனைவரும் முகமது ஷமி மற்றும் இந்திய அணியுடன் இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார். 
     

     

    News