இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு டிராவிட் விண்ணப்பம்
Views - 227 Likes - 0 Liked
-
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரியின் பதவி காலம் நடப்பு 20 ஓவர் உலக கோப்பை போட்டியுடன் முடிவுக்கு வருகிறது. எனவே புதிய தலைமை பயிற்சியாளர் மற்றும் உதவி பயிற்சியாளர் பதவிகளுக்கு தகுதி படைத்தவர்கள் விண்ணபிக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்து இருந்தது. இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க நேற்று கடைசி நாளாகும்.இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குனருமான ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு நேற்று முறைப்படி விண்ணப்பம் அனுப்பினார். பவுலிங் பயிற்சியாளர் பதவிக்கு பராஸ் மாம்ப்ரேவும், பீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு அபய் ஷர்மாவும் முன்னதாகவே விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் இருவரும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் டிராவிட்டுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.ஐ.பி.எல். போட்டியின் போது டிராவிட் அமீரகம் சென்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய்ஷா ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பெரிய வீரர்கள் யாரும் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்காததால் டிராவிட் நிச்சயம் இந்த பதவியை பிடிப்பார் என்று இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. டிராவிட் தலைமை பயிற்சியாளராகும் பட்சத்தில் அவர் தற்போது வகிக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமி இயக்குனர் பதவி காலியாகும். அந்த இடத்துக்கு முன்னாள் வீரர்கள் வி.வி.எஸ்.லட்சுமண், அனில் கும்பிளே ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.News