ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: அரையிறுதியில் இந்தியா-ஜப்பான் இன்று மோதல்
Views - 252 Likes - 0 Liked
-
5 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த இந்தியா (10 புள்ளி), தென்கொரியா (6 புள்ளி), பாகிஸ்தான் (5 புள்ளி), ஜப்பான் (5 புள்ளி) ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. எல்லா ஆட்டங்களிலும் தோல்வி கண்ட வங்காளதேச அணி வெளியேற்றப்பட்டது.இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, ஆசிய விளையாட்டு சாம்பியனான ஜப்பானை எதிர்கொள்கிறது. முதலாவது லீக் ஆட்டத்தில் தென்கொரியாவுடன் (2-2) டிரா கண்ட மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி அடுத்த ஆட்டங்களில் வங்காளதேசம், பாகிஸ்தான், ஜப்பானை (6-0) அடுத்தடுத்து துவம்சம் செய்து நல்ல நம்பிக்கையுடன் இருக்கிறது.இந்த போட்டி தொடரில் ஜப்பான் அணி, வங்காளதேசத்தை மட்டுமே தோற்கடித்தது. பாகிஸ்தான், தென்கொரியாவுக்கு எதிரான ஆட்டங்களில் டிரா செய்தது. இந்தியாவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் ஒரு கோல் கூட திருப்ப முடியாமல் சரண் அடைந்த ஜப்பான் அணி அந்த தோல்வியில் இருந்து மீண்டு பதிலடி கொடுக்க எல்லா வகையிலும் போராடும். அதேநேரத்தில் டோக்கியோ ஒலிம்பிக் லீக் சுற்று மற்றும் முந்தைய ஆட்டத்தில் தொடர்ந்து ஜப்பானை வீழ்த்தி இருக்கும் இந்திய அணி அந்த ஆதிக்கத்தை தொடர முனைப்பு காட்டும்.இறுதிப்போட்டிக்குள் நுழைய இரு அணிகளும் மல்லுக்கட்டும் என்பதால் இந்த போட்டி விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக நடைபெறும் மற்றொரு அரைஇறுதியில் பாகிஸ்தான்-தென்கொரியா (மாலை 3.30 மணி) அணிகள் சந்திக்கின்றன.News