" “If opportunity doesn't knock, build a door.”"

சென்னை பல்கலைக்கழக தடகள போட்டி: ஈட்டி எறிதலில் பிரேவ்மேன் ஹார்ட் புதிய சாதனை

Views - 246     Likes - 0     Liked


  • சென்னை பல்கலைக்கழகம் சார்பில் ஏ.லட்சுமணசாமி முதலியார் பொன்விழா நினைவு 53-வது தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இதில் 73 கல்லூரிகளை சேர்ந்த 1,501 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். தொடக்க விழாவில் சென்னை பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) என்.மதிவாணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். 
     
    முதல் நாளில் நடந்த ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் எம்.சி.சி. வீரர் எஸ்.பிரேவ்மேன் ஹார்ட் 72.36 மீட்டர் தூரம் வீசி புதிய சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இதற்கு முன்பு 2004-05-ம் ஆண்டு லயோலா வீரர் மணிவண்ணன் 65.43 மீட்டர் எறிந்ததே சாதனையாக இருந்தது.
     
    பெண்களுக்கான டிரிபிள் ஜம்ப் பந்தயத்தில் எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி வீராங்கனை பி.பபிஷா 13.10 மீட்டர் தூரம் தாண்டி புதிய சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இதற்கு முன்பு 2019-20-ம் ஆண்டில் அதே கல்லூரி வீராங்கனை ஆர்.ஜஸ்வர்யா 12.65 மீட்டர் தூரம் தாண்டியதே சாதனையாக இருந்தது. 
     
    5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் எம்.ஆர்.மித்ரா (எத்திராஜ்), 400 மீட்டர் தடை ஓட்டத்தில் ஜெயலட்சுமி (ஸ்டெல்லா மாரிஸ்), சங்கிலி குண்டு எறிதலில் மேதா (லயோலா), உயரம் தாண்டுதலில் ராஜேஸ்வரி (எஸ்.டி.என்.பி.வைஷ்ணவா), 800 மீட்டர் ஓட்டத்தில் புனிதா (எம்.ஓ.பி.வைஷ்ணவா) ஆகியோர் முதலிடம் பிடித்தனர். 
     
    போல்வால்ட் பந்தயத்தில் எம்.ஓ.பி.வைஷ்ணவா வீராங்கனை யுவதர்ஷினி 3.40 மீட்டர் உயரம் தாண்டி போட்டி சாதனையை சமன் செய்ததுடன் தங்கப்பதக்கத்தையும் தனதாக்கினார். 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் சதீஷ்குமார், போல்வால்ட்டில் ஞானடான், 400 மீட்டர் தடை ஓட்டத்தில் மணிகண்டன் (மூவரும் லயோலா), சங்கிலி குண்டு எறிதலில் தினேஷ், 800 மீட்டர் ஓட்டத்தில் கராய் யாதவ், டிரிபிள் ஜம்ப்பில் ஜெஸ்வின் ஆன்ட்ரின் (மூவரும் எம்.சி.சி.) முதலிடத்தை பிடித்தனர். இந்த போட்டி நாளை வரை நடக்கிறது.
    News