‘பூஸ்டர்’ தடுப்பூசி போடுகிறவர்களுக்கு முன்னுரிமை - பொது சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவு
Views - 270 Likes - 0 Liked
-
தமிழகத்தில் உள்ள கொரோனா தடுப்பூசி மையங்களில் தனி கவுண்ட்டர்கள் அமைத்து ‘பூஸ்டர் டோஸ்’ போடுகிறவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட துணை இயக்குனர்களுக்கு, டாக்டர் செல்வவிநாயகம் கடிதம் எழுதியுள்ளார்.பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் அனைத்து மாவட்ட துணை பொது சுகாதாரத்துறை இயக்குனர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-தமிழகத்தில் கடந்த 3-ந்தேதி முதல் 15 முதல் 18 வயதினருக்கும், கடந்த 10-ந்தேதி முதல் ‘ கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் முன்களப் பணியாளார்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கும் பூஸ்டர் டோஸ்’ போடும் பணி தொடங்கியது. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த 11-ந்தேதி நிலவரப்படி 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களில் 23 லட்சத்து 34 ஆயிரத்து 845 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது 70 சதவீதம் ஆகும்.இதைப்போல் ‘பூஸ்டர் டோஸ்’ போட தகுதியான 20 ஆயிரத்து 765 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 10 ஆயிரத்து 91 சுகாதாரப் பணியாளர்களும், 5 ஆயிரத்து 482 முன்களப் பணியாளர்களும், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோயுள்ள 5 ஆயிரத்து 192 பேரும் அடங்குவர்.இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கொரோனா தடுப்பூசி மையங்களில் ‘பூஸ்டர் டோஸ்’ போடுகிறவர்களுக்கும், 15 முதல் 18 வயதுடையவர்களுக்கு ‘கோவேக்சின்’ தடுப்பூசி போடுவதற்கு சிறப்பு கவுண்ட்டர்கள் அல்லது வரிசைகள் ஏற்படுத்தி முன்னுரிமை வழங்க வேண்டும்.மேலும் தற்போது செயல்பட்டு வரும் தனியார் கொரோனா தடுப்பூசி மையத்தில் வழக்கமாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி அல்லாது ‘பூஸ்டர் டோஸ்’ மற்றும் 15 முதல் வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தொடங்க தனியார் நிறுவனத்துக்கு அறிவுறுத்த வேண்டும்.தமிழகத்தில் உள்ள பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர்கள், அரசு மருத்துவ கல்லூரி ‘டீன்’கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு, 2-வது தவணை தடுப்பூசி போட்டு 273 நாட்கள் ஆன ‘பூஸ்டர் டோஸ்’ போட தகுதியானவர்கள் அனைவரும் 3-வது தவணை தடுப்பூசி போடுவதை உறுதி செய்யவேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.News