ரெயில்வே மேம்பாலத்திற்கு நில அளவீடு பணி
Views - 209 Likes - 0 Liked
-
குழித்துறை:மார்த்தாண்டம் அருகே விரிகோட்டில் மாற்றுப்பாதை வழியாக ரெயில்வே மேம்பாலம் அமைக்க நில அளவீடு பணி நடந்தது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.ரெயில்வே மேம்பாலம்மார்த்தாண்டத்தில் இருந்து கருங்கல் செல்லும் சாலையில் விரிகோடு பகுதியில் ரெயில்வே கேட் உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் மற்றும் பஸ் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. மேலும், அடிக்கடி ரெயில்கள் சென்று வருவதால் இந்த ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படுகிறது.இதனால் சாலையில் வாகன போக்குவரத்து தடைபடுகிறது. எனவே இந்த சாலையில் விரிகோடு வழியாக ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.ஆனால் பொதுப்பணித்துறையினர் இந்த பாதைக்கு பதிலாக மாற்றுப்பாதையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.பொதுமக்கள் எதிர்ப்புஇதற்கு பொதுமக்கள் தரப்பில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. தற்போது உள்ள சாலை வழியாக மேம்பாலம் அமைத்தால்தான் பொதுமக்களுக்கு வசதியாக அமையும் என்றும், மாற்றுப்பாதை வழியாக அமைத்தால் விரிகோடு மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த மக்கள் பஸ் ஏறுவதற்கு நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்றும் கூறி வருகிறார்கள்.மேலும் பொதுமக்கள் தரப்பில் அனைத்துக் கட்சியினர் அடங்கிய விரிகோடு ரெயில்வே மேம்பால போராட்டக் குழு அமைக்கப்பட்டு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.நில அளவீடு பணிஇந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாமல் மாற்றுப்பாதையில் வயல்வெளி வழியாக மேம்பாலம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று குமரி மாவட்ட பொதுப்பணித்துறை பொறியாளர் மணிமாறன் தலைமையில் மாற்றுப்பாதையில் நிலம் கையகப்படுத்த நில அளவீடு பணி நடந்தது.இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டது. எனவே மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.இதற்கிடையே போராட்டக்குழுவினர் அளவீடு பணி நடந்த பகுதிக்கு சென்றனர். ஆனால் போலீசார் அவர்களிடம் சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் நில அளவீடு பணி நடந்தது.சட்டப்படி நடவடிக்கைஇதுகுறித்து விரிகோடு ரெயில்வே மேம்பால அனைத்து கட்சி போராட்ட குழுவினர் கூறும்போது, ‘விரிகோடு ரெயில்வே மேம்பாலத்தை தற்போதுள்ள சாலை மார்க்கமாக அமைப்பதற்காக மதுரை ஐகோர்ட்டை நாடி உள்ளோம். இந்த நிலையில் பொதுமக்களின் பயன்பாட்டை பார்க்காமல் யாருக்கும் பயனளிக்காத வகையில் மாற்றுப்பாதையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க முயற்சி செய்து வருவது வருந்தத்தக்கது. இது தொடர்பாக சட்டப்படியான தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.News