" “If opportunity doesn't knock, build a door.”"

தமிழகம் முழுவதும் 26-வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது..!!

Views - 225     Likes - 0     Liked


  • தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. தினசரி ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், தடுப்பூசி போடும் பணியை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக செப்டம்பர் மாதத்தில் இருந்து மெகா தடுப்பூசி முகாமை தமிழக அரசு நடத்தி வருகிறது. 
     
    அதன் மூலம் ஒவ்வொரு சனிக்கிழமையும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், 100 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி என்ற இலக்கை எட்டுவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது வரை 25 மெகா தடுப்பூசி முகாம்கள் தமிழகத்தில் நடைபெற்றுள்ளது. 
     
    இதுவரையில் 10 கோடியே 6 லட்சத்து 29 ஆயிரத்து 631 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 18 முதல் 44 வயதுள்ள பிரிவுகளில் 5 கோடியே 10 லட்சத்து 31 ஆயிரத்து 421 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இன்னும் 2 தவணை தடுப்பூசி போடாமல் ஒரு கோடியே 25 லட்சம் பேருக்கு மேல் உள்ளனர். 
     
    முதல் தவணை தடுப்பூசி போடாமல் 50 லட்சம் பேர் உள்ளனர். இவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டாமல் இருப்பது சுகாதாரத்துறையை கவலை அடைய செய்துள்ளது. சென்னையில் முதல் தவணை 98 சதவீதமும், 2-வது தவணை 87 சதவீதமும் போடப்பட்டுள்ளது. இதுவரையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களும், 2-வது தடுப்பூசி போடும் தகுதி வாய்ந்தவர்களும் உடனே செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
     
    இந்நிலையில் தமிழகத்தில் 26-வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் மையங்களில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 1 லட்சத்திற்கும் மேலான சுகாதார பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபடுகிறார்கள்.  சென்னையில் 1,600 மையங்களில் இந்த முகாம்கள் நடக்கிறது.
     
    மெகா சிறப்பு முகாம்களில் முன்பு 20 லட்சம் பேர் வரை தடுப்பூசி செலுத்தினர். தற்போது இந்த எண்ணிக்கை படிப்படியாக 5.5 லட்சமாக குறைந்துள்ளது. இன்று நடைபெறும் முகாம்களில் தகுதி உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டு நோய் தொற்றில் இருந்து இனி வரும் காலங்களில் பாதுகாத்து கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
    News