" “If opportunity doesn't knock, build a door.”"

5 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி எப்போது? - இன்று முக்கிய முடிவு

Views - 210     Likes - 0     Liked


  • இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கட்டுக்குள் இருந்தாலும், தொடர்ந்து கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்ட 84 சதவீதத்தினர் 2 டோஸ் தடுப்பூசிகளை போட்டுக்கொண்டதாலும், இயற்கையான தொற்றின் மூலமாகவும், பெரும்பாலோருக்கு கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்புச்சக்தி அதிகரித்துள்ளது. 
     
    இது மேலும் அதிகரிக்கிற வகையில் இப்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், 2-வது தடுப்பூசி போட்டு 9 மாதங்கள் ஆகி இருந்தால் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் முன்எச்சரிக்கை டோஸ் என்ற பெயரில் போடப்படுகிறது. எனவே குழந்தைகள்தான் நோய் எதிர்ப்புச்சக்தியை பெறாத நிலை உள்ளது. 
     
    அதுவும் இப்போது பள்ளிக்கூடங்கள் திறந்து நேரடி வகுப்புகள் நடைபெறுகிறபோது, பல இடங்களில் குழந்தைகள் தொற்றுக்கு ஆளாவது பெற்றோர்களை கவலைக்கு ஆளாக்கி இருக்கிறது. குழந்தைகளுக்கும் தடுப்பூசிதான் கொரோனாவுக்கு எதிரான கேடயம் ஆகும்.
     
    இந்தநிலையில் பிரதமர் மோடி நேற்றுமுன்தினம் மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலிக்காட்சி வழியாக கலந்துரையாடியபோது, கூடிய விரைவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதே, அரசின் முன்னுரிமை என அறிவித்தார்.
     
    இதற்கு மத்தியில், 5 முதல் 12 வயது வரையிலானவர்களுக்காக பயாலஜிக்கல்- இ நிறுவனத்தின் கோர்பேவாக்ஸ் தடுப்பூசிக்கும், 5 முதல் 12 வயது வரையிலானவர்களுக்கு பாரத் பயோடெக் நிறுவனத்தாரின் கோவேக்சின் தடுப்பூசிக்கும் இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அவசர பயன்பாட்டு அனுமதியை 26-ந் தேதி வழங்கியது.
     
    இதையடுத்து குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்குவது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.
     
    இந்தநிலையில் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா, டெல்லியில் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், “5 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்து, தொழில் நுட்பக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் முடிவு எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
     
    டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) தடுப்பூசி திட்டத்துக்கான தேசிய தொழில் நுட்ப ஆலோசனை குழு கூட்டம் இன்று நடக்கிறது.
     
    இந்த கூட்டத்தில் 5 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை எப்போது தொடங்கலாம் என்பது பற்றி விவாதித்து முடிவு எடுத்து, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வார்கள்.
     
    அந்த பரிந்துரையை ஏற்று, மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    News