புயலாக வலுவிழந்தது “அசானி” - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
Views - 232 Likes - 0 Liked
-
தென்கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 8-ந் தேதி புயலாக உருவெடுத்தது. அதற்கு ‘அசானி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் இன்று (புதன்கிழமை) பிற்பகலுக்குள் காக்கிநாடா-விசாகப்பட்டினம் இடையே கரையை கடந்து, ஒடிசா நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அப்போது, ஆந்திர கடலோர பகுதியில் மணிக்கு 95 கி.மீ. வேகம் வரையிலும், ஒடிசா கடலோர பகுதியில் மணிக்கு 65 கி.மீ. வேகம் வரையிலும் பலத்த காற்று வீசும் என்று தெரிகிறது. அத்துடன் மேற்கண்ட மாநிலங்களிலும், மேற்கு வங்காளத்தின் தென்பகுதியிலும் கனமழை கொட்டி தீர்க்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் வங்கக் கடலில் தீவிர புயலாக நிலைகொண்டிருந்த அசானி வலுவிழந்து புயலாக நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திராவின் மச்சிலிப்பட்டணத்துக்கு தென்கிழக்கே 60 கி.மீ தொலைவில் அசானி புயல் தற்போது நிலவுகிறது என்றும் அசானி புயல் நாளை காலைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழக்கும் என்று தெரிவித்துள்ளது.மேலும் ஆந்திரா நோக்கி நகரும் அசானி புயல் பின்னர் ஒடிசா கடற்கரை பகுதியை நோக்கி நகர வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.News