"ஹிஜாப் அணிவது அத்தியாவசியமாக பின்பற்றப்படும் வழக்கம் அல்ல" - சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு வாதம்
Views - 216 Likes - 0 Liked
-
கர்நாடகத்தில் கல்வி நிறுவனங்களில் வகுப்பறைக்குள் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர கர்நாடக அரசு தடை விதித்து உள்ளது. இதனை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான இறுதி விசாரணையின் போது அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று கர்நாடக ஐகோர்ட்டு கூறியது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுகன்சு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று 8-வது நாளாக மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது கர்நாடக அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா 2021 வரை எந்த ஒரு மாணவியும் ஹிஜாப் அணியவில்லை என்றும் மாணவிகள் யாரும் தாமாக ஹிஜாப் அணியவில்லை என்றும் குறிப்பிட்ட பிற சமூகத்தினர் காவி சால்வையை அணிந்து வந்த போது அவையும் தடை செய்யப்பட்டதாக வாதிட்டார். ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மதத்தில் அத்தியாவசியமாக பின்பற்றப்படும் வழக்கம் என்பதை நிரூபிக்கும் ஆதாரங்களை முன்வைக்கவில்லை என கூறினார். மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல் துஷ்யந்த் தவே கூறும்போது, முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவது யாருடைய மனதையும் புண்படுத்தாது. ஹிஜாப் தான் அவர்களின் அடையாளம். லவ் ஜிகாத்தும், ஹிஜாப் விவகாரமும் சிறுபான்மையின பெண்களை மூலையில் தள்ளும் சதி என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மனு மீதான விசாரணையை இன்று (புதன்கிழமை) நடைபெற உள்ளது.
News